×

அதிகாரத்தை பறிகொடுத்தது பாஜ ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி

ராஞ்சி:  ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளை கைப்பற்றி, ஆட்சி அமைக்கிறது. ஆளும் பாஜ 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று அதிகாரத்தை பறிகொடுத்தது. மகாராஷ்டிராவை தொடர்ந்து பாஜ.வுக்கு மேலும் பலத்த அடியாக ஜார்க்க்கண்ட் தோல்வி அமைந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜ தலைமையில் முதல்வர் ரகுபர்தாஸ் ஆட்சி நடந்து வந்தது. சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து  ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது.

முதல் மூன்று கட்ட தேர்தல்கள் முறையே நவம்பர் 30, டிசம்பர் 7 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற்றது. நான்காவது கட்ட தேர்தல் கடந்த 16ம் தேதியும், 5வது கட்டமாக கடந்த 20ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டன. ஆளும் பாஜ தனியாக களம் இறங்கியது. 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை.

மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணி முதல் தொடங்கியது. வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலில் சற்று சறுக்கினாலும் பின்னர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர். இதைத்தொடர்ந்து, நேற்று இரவு 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களை கைப்பற்றி இருந்தது. ஆளும் பாஜ 25 இடங்களையும் கைப்பற்றின. இதன் மூலம் அம்மாநிலத்தில் ஜேஎம்எம் - காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை அமைக்கிறது.

இக்கூட்டணியின் சார்பில் முதல்வராக ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் விரைவில் பதவியேற்கிறார். புதிய அத்தியாயம்: தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘ஜார்க்கண்ட் மக்கள் ஜேஎம்எம் கூட்டணிக்கு தனி பெரும்பான்மையை அளித்துள்ளனர். புதிய அத்தியாயம் தொடங்குகிறது. வாக்களித்த மக்களுக்கு நன்றி, காங்கிரஸ் தலைவர்கள், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.

தனது கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், ஹேமந்த் சோரன்  வீட்டில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார். பின்னர் தனது தந்தையும் கட்சியின் தலைவருமான சிபு சோரன், தாய் ரூபி ஆகியோரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கூட்டணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கூட்டணியின் தலைமைக் கட்சியான ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து டிவீட்டில், ‘‘உங்களுடைய கூட்டணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். இந்த கூட்டணி மாநில மக்களுக்கு சிறப்பான சேவையாற்ற என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார். இதேபோல், பல்வேறு கட்சித் தலைவர்கள் காங்கிரஸ் கூட்டணிக்கும், ஹேமந்த் சோரனுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சோனியா தலைமைக்கு 2வது வெற்றி:
மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி கடந்த ஜூலையில் ராஜினாமா செய்தார். இடைக்கால தலைவராக கடந்த ஆகஸ்டில் சோனியா காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் மகாராஷ்டிராவில் கூட்டணி வைத்து காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இரண்டாவதாக தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது.

மம்தா பானர்ஜி வாழ்த்து:
முதல்வர் மம்தா தனது டிவிட்டர் பதிவில், “குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் ஜார்க்கண்ட் தேர்தல் நடந்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு வாக்களித்த அண்டை மாநில மக்களுக்கு வாழ்த்துக்கள். ஜேஎம்எம் ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துக்கள். கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என மக்கள் உங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்” என கூறியுள்ளார்.

ஹேமந்த் சோரன் வெற்றி:
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவரும், காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான ஹேமந்த் சோரன், தும்கா மற்றும் பார்ஹைத் தொகுதிகளில் போட்டியிட்டார். தும்காவில் பாஜ தலைவர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த லூயிஸ் மாராந்தியை விட கூடுதலாக 13,188  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பார்ஹைத்திலும்  பாஜ மற்றும் ஏஜேஎஸ்யூ வேட்பாளர்களை காட்டிலும் ஹேமந்த் 25,740 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பாஜ முதல்வரே இறங்குமுகம்:
ஜார்க்கண்டில் ஆளும் பாஜ முதல்வராக இருந்த ரகுபர் தாஸ் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து முன்னாள் அமைச்சரும், பாஜ அதிருப்தி வேட்பாளரான சர்யூ ராய் சுயேச்சையாக போட்டியிட்டார். இதில் 15,000க்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ரகுபர்தாஸ் பின்தங்கியிருந்தார். ஜாம்ஷெட்பூர் மேற்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு சர்யூ ராயக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதால்  அவர் கட்சியில் இருந்து வெளியேறினார். பாஜ.வின் தோல்வி குறித்து ரகுபர்தாஸ் அளித்த பேட்டியில், இது தம்முடைய தோல்விதான் என்றும், இது பாஜ.வுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல என்றும் கூறினார். இதனிடையே நேற்றிரவு கவர்னரை சந்தித்து ரகுபர்தாஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.


ஒரே ஆண்டில் 5 சறுக்கல்:
சமீபத்திய தேர்தல்களில் பாஜ பெரும் சரிவை சந்தித்து வருகின்றது. மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜ பெரும்பான்மைக்கு அருகே வந்தபோதிலும் சிவசேனா கூட்டணியில் இருந்து விலகியதால் ஆட்சி அமைக்க முடியவில்லை. தற்போது ஜார்கண்ட் தேர்தல் முடிவுகளிலும் பாஜ பெரும்பான்மை குறைந்துள்ளது. மக்கள் மத்தியில் பாஜவுக்கான இடம் குறைந்து வருவதை தெளிவாக்குகிறது என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களிலும் பாஜ ஆட்சி அமைக்க முடியவில்லை.


சிஏஏ.க்கு பின் பாஜவின் முதல் தோல்வி:
குடியுரிமை திருத்த சட்டத்தை பாஜ தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தொடர்ந்து வருகின்றது. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு பின்னர் பாஜ சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். ஏற்கனவே ஜார்கண்டில் பாஜ ஆட்சி நடந்து வந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ ஆட்சியை பறிகொடுத்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த நில ஆர்ஜித சட்டமும் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

சரிந்த ஓட்டு சராசரி விகிதம்:
2014ம் ஆண்டு வீசத்தொடங்கிய மோடி அலையானது தற்போது அடுத்தடுத்து வீழ்ச்சி அடைந்து வருகின்றது. மக்களவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் பாஜ ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் மக்களவை தேர்தல் போன்று சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜ.வினால் பெரும்பான்மையை பெற முடியவில்லை. மக்களவை தேர்தலில் பாஜ வாக்கு வங்கியானது ஜார்கண்டில் 55 சதவீதமாகவும், அரியானாவில் 58 சதவீதமாக இருந்தது. இதுவே சட்டப்பேரவை தேர்தலில் முறையே 33 சதவீதம் மற்றும் 36 சதவீதமாக சரிந்துள்ளது.


Tags : coalition government ,Baja Jharkhand ,coalition ,Congress , Baja, Jharkhand, Congress alliance, rule
× RELATED இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன்...