×

சவுதி பத்திரிகையாளர் கஷோகி கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை

* 3 பேருக்கு 24 ஆண்டுகள் சிறை
* 2 அதிகாரிகள் விடுதலை

ரியாத்: சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்ட வழக்கில், சவுதி அரேபியா நீதிமன்றம் 5 பேருக்கு மரண தண்டனை, 3 பேருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் `வாஷிங்டன்  போஸ்ட்’ நாளிதழின் கட்டுரையாளராக பணியாற்றி வந்த சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி, துருக்கியில் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் இந்நாட்டு அதிகாரிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சவுதி மன்னர் குடும்பத்தை கடுமையாக விமர்ச்சித்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த கொலை சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலக நாடுகள் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். இது தொடர்பாக சவுதி அரேபியா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனையும், 3 பேருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சவுதி அரேபியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பு வக்கீல் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதே நேரம், இந்த வழக்கில் சவுதி இளவரசர் சல்மானின் முன்னாள் ஆலோசகர் சாத் அல் கதானி, நுண்ணறிவு பிரிவு துணைத்  தலைவர் அகமத் அல் அசிரி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு `போதிய ஆதாரம் இல்லை’ என்று விடுவிக்கப்பட்டனர். இதேபோல், கஷோகி கொல்லப்பட்ட போது இஸ்தான்புல் சவுதி தூதரக அதிகாரியாக இருந்த முகமது அல் குதாபி மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : death ,Saudi , Saudi journalist, Kazhoki murder case, 5 people sentenced to death
× RELATED துபாயைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை!