×

தமிழகத்தில் 3 இடங்களில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ரூ.453 கோடி கடன்

புதுடெல்லி: தமிழகத்தில் 3 மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க, தமிழக அரசுக்கு ரூ.453 கோடி கடன் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மீன்பிடி தொழில் மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, நபார்டு வங்கி மூலம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. பொது பயன்பாட்டுக்கான மீன்பிடி துறைமுகம், மீன்பிடி இறங்குதளம் அமைக்கவும் மீன் பண்ணைகள், மீன் மார்க்கெட், நோய் அறியும் ஆய்வுக்கூடங்கள் போன்றவற்றை மேம்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. மீன்பிடி தொழில் மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ரூ.7,522 கோடியில் இருந்து மேற்கண்ட திட்டங்களுக்காக நபார்டு வங்கி மூலம் வழங்கப்படுகிறது.

அரசு புள்ளி விவரங்களின்படி, இந்த நிதியில் இருந்து தமிழக அரசு ரூ.836.80 கோடி கேட்டு சமர்ப்பித்திருந்தது. இதுபோல் ஆந்திரா ரூ.1,295 கோடி, தெலங்கானா ரூ.265 கோடி, ஜம்மு காஷ்மீர் ரூ.104.96 கோடி, மகாராஷ்டிரா ரூ.99 கோடி, அசாம் ரூ.21.65 கோடி, கேரளா ரூ.19.42 கோடி, மிசோரம் ரூ.8.57 கோடி கேட்டிருந்தன. இந்நிலையில், தமிழகத்தில் 3 மீன் பிடி துறைமுகங்கள் அமைக்க, தமிழக அரசுக்கு ரூ.453 கோடி கடனை மேற்கண்ட நிதியில் இருந்து நபார்டு வங்கி மூலம் வழங்க மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கடனை 12 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். மத்திய அரசு 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கும்.  

இதற்கான ஒப்பந்தம், மத்திய மீன்வளத்துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசு, தேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி (நபார்டு) இடையே மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் முன்னிலையில் கையெழுத்தானது. இதுகுறித்து அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில், ‘‘மீன்பிடி தொழில் மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து கடன் பெற மேற்கண்ட ஒப்பந்தத்தில் முதல் மாநிலமாக தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது. கடனை வழங்குவதற்கான நடைமுறை தொடங்கப்பட்டுள்ளன’’ என்றார்.

Tags : Tamil Nadu ,locations , Tamil Nadu, 3 places, fishing harbor, Rs 453 crore, loan
× RELATED கல்விக்கட்டணத்தில் 70%-ஐ 3 தவணையில்...