×

தீவிரவாதிகள் ஊடுருவியதாக புகைப்படம் வெளியீடு குமரியில் 4 பேரின் வீடுகளில் ரெய்டு

* சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் அதிரடி  
* லேப்டாப், செல்போன்கள், வங்கி பாஸ் புத்தகங்கள் பறிமுதல்

நாகர்கோவில்: தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக புகைப்படம் வெளியிடப்பட்ட நிலையில் குமரி மாவட்டத்தில் எஸ்ஐயூ எனப்படும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் திருவிதாங்கோடு, கோட்டார் இளங்கடை ஆகிய பகுதிகளில் 4 வீடுகளில் நடத்திய சோதனையில் லேப்டாப், செல்போன்கள், வங்கி பாஸ் புத்தகங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்தியாவில் இருந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் நபர்களை தேசிய புலனாய்வு பிரிவு (என்ஐஏ) அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. அப்போது கிடைக்கும் ஆவணங்களையும், பொருட்களையும் பறிமுதல் செய்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே கேரளாவை சேர்ந்த சில இளைஞர்கள், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் வாயிலாக இந்தியாவில் அசம்பாவித சம்பவங்கள் நடத்தப்படலாம் என்று தகவலும் வெளியாகின. இதில் சேலத்தை சேர்ந்த ஒருவர் ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்து கொண்டு, கேரள இளைஞர்களை மூளைச்சலவை செய்து, தீவிரவாத இயக்கத்தில் சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு அவரது வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது சில சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருடன் இருந்த தீவிரவாதிகள் 4 பேர் தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ளதாக தகவல் உளவு பிரிவு போலீசாருக்கு கிடைத்தது. கன்னியாகுமரி வழியாக இவர்கள் காரில் தமிழகத்திற்குள் வந்ததாக மத்திய உளவுத்துறையும் தெரிவித்துள்ளது. இதன் பேரில், மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும் தமிழக முதல்வர் மற்றும் பாஜ, இந்து அமைப்பு தலைவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே என்ஐஏ அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி கேரளாவில் போலீசாரின் பிடியில் சிக்கிய நிலையில் அவரை என்ஐஏ அதிகாரிகள் கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.  இதன் தொடர்ச்சியாக 4 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியுள்ளனர் என்று கூறி தேடப்படும் அந்த 4 பேரின் புகைப்படத்தை போலீசார் கடந்த 19ம் தேதி வெளியிட்டனர். அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம் (25), கோட்டார், இடலாக்குடி, இளங்கடையை சேர்ந்த செய்யது அலி நிவாஸ் (25), பரங்கிபேட்டையை சேர்ந்த அப்துல்சமது, காஜா மொகைதீன் ஆவர்.

இவர்கள் 4 பேரையும் பொதுமக்கள் கண்டால் 1512 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த 4 பேரின் புகைப்படங்களுடன் தமிழகம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் கன்னியாகுமரி வருகின்றனர். இந்தநிலையில் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். புகைப்படங்கள் வெளியிட்டு தேடப்படும் குமரி மாவட்டத்தை சேர்ந்த தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் அவர்களின் வீடுகளில் எஸ்ஐயூ எனப்படும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் டிஎஸ்பி சுப்பையா தலைமையில் 80க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில், கோட்டார் இளங்கடை மாலிக் தினார் நகரை சேர்ந்த செய்யது அலி நிவாஸ், அவருடன் தொடர்பில் இருந்ததாக தவுபிக், அவரது மனைவி, தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் உள்ள அப்துல் சமீம் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனை நேற்று நடத்தப்பட்டது. காலை 6 மணிக்கு தொடங்கி 6.45 மணி வரை போலீசார் தொடர்ந்து சோதனையிட்டனர். தவுபிக் வீட்டில் இருந்து எஸ்ஐயு போலீசார் நடத்திய சோதனையில் ஒரு லேப்டாப், ஒரு செல்போன், 2 பாஸ் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றினர்.

கடைசியாக இவர்கள் எப்போது வீட்டிற்கு வந்தார்கள், செல்போன்களில் தொடர்பு கொள்வது உண்டா, பணம் பரிசு பொருட்கள் பரிமாற்றம் ஏதேனும் நடைபெற்றுள்ளதா, அவர்களது நண்பர்கள் யாரேனும் உள்ளார்களா, அவர்கள் பற்றிய தகவல்கள் ஏதேனும் தெரியுமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அவர்களை பற்றிய தகவல் தெரியவந்தால் உடனே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் லேப்டாப்களை போலீசார் பரிசோதித்துவிட்டு திரும்ப கொடுத்துள்ளனர். அதனை போன்று வங்கி பாஸ் புத்தகங்களை ஜெராக்ஸ் எடுத்துவிட்டு திரும்ப கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Tags : extremists ,raid ,houses ,Kumari , Terrorists, intruders, photo publishing, Kumari, 4 people, house raid
× RELATED போதை பொருட்கள் கடத்தலில் சட்டவிரோத...