×

அஞ்செட்டி மலைப்பாதையில் பரபரப்பு திடீரென கழன்று ஓடிய 108 ஆம்புலன்ஸ் சக்கரம்: கர்ப்பிணி அலறல்

தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டி மலைப்பாதையில் கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற 108 ஆம்புலன்சின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி அருகே கோவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பவி(22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால் உரிகம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மருத்துவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பவியை அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, பவி மற்றும் அவரது உறவினர்களை ஏற்றிக்கொண்டு 108 ஆம்புலன்ஸ் உரிகம் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு வளைவில் ஆம்புலன்சை டிரைவர் திருப்பிய போது இடதுபுற சக்கரம் சுவரில் உரசி திடீரென தனியே கழன்று முன்னால் ஓடியது. இதனால் நிலைதடுமாறிய ஆம்புலன்ஸ் ஒருபக்கமாக சாய்ந்தது. உள்ளே இருந்த பவி உள்ளிட்டோர் கத்தி கூச்சலிட்டனர். சுதாரித்துக்கொண்ட டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்தினார். பின்னர் டிரைவர் அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, வேறொரு ஆம்புலன்ஸ் வரவழைத்து பவியை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கர்ப்பிணியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்சின் சக்கரம் கழன்று ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : panic attack , Anjetti Mountain Trail, Exciting, Running Back, 108 Ambulance, Wheel, Pregnant
× RELATED தாராபுரம் அருகே கொரோனா பீதியால்...