×

ஆரன்முளாவில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் புடைசூழ தங்க அங்கி ஊர்வலம்: 27ம் தேதி மண்டல பூஜை

திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரான சித்திரை திருநாள் பாலராமவர்மா சபரிமலை கோயிலுக்கு 450 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது வருடந்தோறும் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு வருகிறது. இந்த தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜையை முன்னிட்டு இங்கிருந்து ரதத்தில் வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்படும். இந்த ஊர்வலம் நேற்று காலை 7 மணியளவில் ஆரன்முளாவில் இருந்து புறப்பட்டது. தங்க அங்கி ஊர்வலத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணியளவில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த அங்கி ஆரன்முளா கோயிலில் வைக்கப்பட்டது.

பின்னர் ஊர்வலம் தொடங்கியது. ஓமல்லூர், கோன்னி, தெருநாடு வழியாக 26ம் தேதி மதியம் பம்பையை அடையும். பம்பை கணபதி கோயிலில் இந்த அங்கி பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு 6.30 மணியளவில் சன்னிதானத்தை அடையும். பின்னர் அந்த அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். மறுநாள் காலை 10.11க்கும் 11.40 மணிக்கும் இடையே மண்டல பூஜை நடைபெறும். பூஜைக்கு பின் அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். 26, 27 தேதிகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நிலக்கல், பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சிறுசிறு குழுக்களாக சன்னிதானத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர். அதுபோல் வாகனங்கள் நிறுத்தவும், அரசு பேருந்து இயக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.மண்டல பூஜை தினத்தன்று இரவு 9 மணிக்கு இரவு பூஜை தொடங்கும். அதுவரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதனால் அன்று இரவு 7 மணிக்கு பின்னர் பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். மண்டல பூஜை முடிந்து 28, 29ம் தேதிகளில் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும்.

மீண்டும் மகர விளக்கு பூஜைகளுக்காக 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். மண்டல பூஜைக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags : Pilgrims ,Sabarimala ,Aranmula ,27th Pilgrims ,Mandala Pooja , Aranmula, sabarimalai, devotees, golden robe and procession
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு