×

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான அரசு விளம்பரங்களை நிறுத்த வேண்டும்: மேற்குவங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான ஊடக விளம்பரங்களை அரசு நிறுத்த வேண்டும் என்று மேற்குவங்க மாநிலத்துக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. அங்கு ரயில் நிலையங்கள், ரயில்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் ஏராளமானவை தீக்கிரையாக்கப்பட்டன. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், மூன்று நாட்களாக தொடர்ந்து, இந்த சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தினார். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கவர்னர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இ்ந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மேற்குவங்க மாநில அரசு பத்திரிகை, தொலைக்காட்சி என்று பல்வேறு வகை ஊடகங்களில் விளம்பரங்கள் செய்து வருகிறது. மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக, மக்களின் வரிப்பணத்தை கொண்டு, விளம்பரங்கள் செய்யப்படுவதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி டி.பி.என்.ராதாகிருஷ்ணன், நீதிபதி ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநிலத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு பாதிப்பில்லை என்றும், அமைதி நிலவுவதாகவும் அட்வகேட் ஜெனரல் கிஷோர் தத்தா கூறினார். இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘மாநில அரசு உடனடியாக குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான அனைத்து விளம்பரங்களையும் நிறுத்த வேண்டும். ரயில்வேக்கு ஏற்பட்ட சேதங்கள், அவற்றின் மதிப்பு குறித்து, அத்துறையினர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று கூறி வழக்கை வரும் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்:
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் உள்ள மகாத்மா காந்தி சிலையின் முன் ஏராளமான இந்தியர்கள் திரண்டு, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாஷிங்டனை தலைமையிடமாக கொண்ட அரசு சாரா அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதேபோன்று, அமெரிக்கவாழ் இந்திய முஸ்லிம்கள், கிரேட்டர் வாஷிங்டன் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “நாங்கள் விரும்புவது இந்திய அரசால் சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இதனால் நாம் அனைவரும் ஒரே இந்தியா ஒரே மக்களாக இருக்க முடியும்’ என்றனர்.

ஜபல்பூரில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்:
மத்தியப் பிரதேச மாநிலத்தில் போராட்டத்தில் அதிகளவில் வன்முறை நடந்த ஜபல்பூரில் தற்போது அமைதி திரும்பி உள்ளதை தொடர்ந்து, அங்கு அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டது. காவல் துறை அதிகாரிகளின் கூட்டத்தை தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக போலீஸ் எஸ்.பி. அமித் சிங் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை இங்கு நடந்த ேபாராட்டத்தில் ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், பொதுச் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.

ஜமியா பல்கலையில் 8ம் நாளாக தர்ணா:
டெல்லியில் உள்ள ஜமியா மிலியா பல்கலையின் முன்பு 8வது நாளாக நேற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூர் நகர், பட்லா ஹவுஸ் மற்றும் ஓக்லா பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்தத் சட்டத்தின் மூலம்  முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும், இதர சிறுபான்மையினரையும், வெளிநாட்டினர் என்றும் சட்டவிரோத குடியேறிகள் என்றும் அறிவிக்கப்பட்டால், இவர்களை தடுப்புக்காவலில் வைக்க எத்தனை காவல் மையங்களைத்தான் மத்திய அரசு கட்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.

‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து திட்டமிட வேண்டும்’
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் தலைவர்களுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உட்பட பலருக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘‘குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை நாட்டு மக்களிடம் சாதி, மத பாகுபாடின்றி அனைவரிடமும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியள்ளது. இந்தியாவை காக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நமது ஜனநாயகத்தை காக்கவும், எதிர்ப்பு தெரிவிக்கும் திட்டம் குறித்து ஆராயவும் நாம் அனைவரும் சந்திக்க வேண்டும். இந்த நேரத்தில், நாம் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். எதிர்கட்சிகளின் ஒற்றுமை ஓர் அணியில் இருக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

நட்டா தலைமையில் கொல்கத்தாவில் ஆதரவு போராட்டம்:
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், நாடு முழுவதும் பாஜ சார்பில் சட்டத்துக்கு ஆதரவாக பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் நேற்று பாஜ செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் பாஜ மூத்த தலைவர்கள் உட்பட பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மத்திய கொல்கத்தாவில் உள்ள இந்த் சினிமாவில் தொடங்கிய பேரணி, ஷியாம்பஜார் வரையில் நடந்தது. குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் தேவை என்றும், மத்திய அரசுக்கு நன்றி என்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.

ராம்பூரில் 31 பேர் மீது போலீஸ் வழக்கு:
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சமீபத்தில் நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் குண்டுக் காயத்துடன் 22 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் தொடர்பான நடவடிக்கைகள் பற்றி ராம்பூர் எஸ்.பி. அஜய் பால் சர்மா கூறுகையில், ‘‘போராட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும். தற்போது மாவட்டத்தில் அமைதி நிலவுகிறது. எந்த இடத்திலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லை’’ என்றார்.

டெல்லியில் 15 பேருக்கு காவல் நீட்டிப்பு:
டெல்லி தார்கஞ்சில் நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 15 பேரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக இந்த 15 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் கடந்த சனிக்கிழமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி கபில் குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை இரண்டு நாள் நீதிமன்ற காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அவர்கள் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களின் காவலை 14 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : publicity campaigns ,government ,West Bengal ,Citizenship Amendment Act: Supreme Court , Citizenship Amendment Act Government Advertisement, West Bengal Government. High Court
× RELATED மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!!