×

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் நாட்டு மக்களை பாஜ முட்டாளாக்க முயற்சிக்கிறது: காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: ‘‘தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் விவகாரத்தில் நாட்டு மக்களை பாஜ முட்டாளாக்க முயற்சிக்கிறது’’ என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு பலத்த எதிர்ப்பு நிலவி வருகின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் தொடர்கின்றன. கடந்த நவம்பர் 28ம் தேதி ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் பாஜ ஆட்சிக்கு வந்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தது.

இந்நிலையில் ஞாயிறன்று ஜார்க்கண்டில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ‘‘2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மத்திய அரசானது தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து நாடாளுமன்றத்தில் மட்டும் அல்ல, மத்திய அமைச்சரவையில் கூட விவாதிக்கவில்லை’’ என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த இருவேறு நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘இந்த நாடு உங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறது. பிரதமர் மோடியின் பேச்சை வரவேற்கிறோம். நாட்டில் அமைதியின்மை நிலவி வரும் நிலையில், நீங்கள் பொய் மற்றும் வெறுப்பு கலந்து உரையாற்றி உள்ளது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.

பிரிவினையை உருவாக்கும் மிக சிறந்த தலைமையிடம் இருந்து நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?” என பதிவிட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், “பிரதமர் மோடி டெல்லியில் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து விவாதிக்கவில்லை என்கிறார். ஆனால் ஜார்க்கண்ட் தேர்தல் அறிக்கையில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என பாஜ உறுதியளித்துள்ளது.  இப்போது இரண்டு விஷயங்களை சொல்லுங்கள். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடையே நல்லிணக்கம் உள்ளதா? அதிகாரம் மற்றும் அமைப்பு இடையே பிரிவினை உள்ளதா அல்லது இருவரும் இணைந்து நாட்டை முட்டாளாக்க முயற்சிக்கிறார்களா?” என கேட்டுள்ளார்.

Tags : nationals ,Baja ,Congress , National Citizens Record, Affairs, Nationals, Baja Fool, Congress Criticism
× RELATED திருவள்ளூரில் இறுதி கட்ட பிரசார...