×

அடிப்படை வசதியில்லாததால் அல்லல்படும் பொதுமக்கள்: தென்காசியில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் காய்கறி சந்தை

தென்காசி: தென்காசி -திருநெல்வேலி மெயின் ரோட்டில் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் சுமார் 20 கடைகள் சாலையோரம் வெளிப்பக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70க்கும் மேற்பட்ட கடைகள் சந்தையின் உட்புறம் 8 அடிக்கு 10 அடி அளவில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தினசரி சந்தையானது எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி காணப்படுகிறது. சந்தையின் மாடி பகுதிகளில் பராமரிப்பின்றி செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. உட்புறம் உள்ள தளமும் தணிவாக இருப்பதால் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. பொதுமக்கள் சகதியில் நடந்து சென்று காய்கறிகளை வாங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் தினசரி காய்கறி மார்க்கெட்டில் தேங்கும் குப்பைகளும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை தான் அப்புறப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதுவும் சந்தையின் மேல் பகுதியில் பராமரிப்பு ஓரளவு நன்றாக இருக்கும் நிலையில் கீழ்ப்பகுதி பராமரிப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் தினசரி காய்கறி மார்க்கெட் மட்டுமின்றி வாரந்தோறும் புதன்கிழமை அன்று வார சந்தையும் நடக்கிறது. வாரச்சந்தை சமயத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்லும் நிலையில் மழை பெய்தால் நனைந்துகொண்டே காய்கறிகளை வாங்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் சேறும் சகதியுமாக சுகாதாரமின்றி காணப்படுகிறது.

ஒவ்வொரு கடைக்கும் 33 ரூபாய் கட்டணமாக நாளொன்றுக்கு வசூலிக்கப்படுகிறது. தற்போது தென்காசி தனி மாவட்டமாக உருவானதுடன் மாவட்ட தலைநகரமாகவும் விளங்குவதால் தினசரி காய்கறி சந்தைக்கு என பெரிய அளவிலான இடத்தை தேர்வு செய்வதுடன், அங்கு பொதுமக்கள் மழைக்காலத்திலும் வெயில் காலத்திலும் பாதுகாப்பாக நின்று காய்கறிகளை வாங்கிச் செல்லும் வகையில் சகல வசதிகளுடன் சந்தை அமைக்கப்படவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தின் பிற பகுதிகளில் அதாவது ஊராட்சி பகுதிகளில் கூட நவீன சந்தைகள் உருவாகியுள்ள நிலையில் மாவட்ட தலைநகரான தென்காசி தினசரி காய்கறி மார்க்கெட் நிலை மிகவும் மோசமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மழைக்காலங்களில் அதிகாரிகள் நேரில் சென்று அங்குள்ள நிலையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக உள்ளது.

Tags : public ,South Asia ,The South Indian , Infrastructure, public, coconut, vegetable market
× RELATED மசாலாக்களின் மறுபக்கம்…