×

ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே பயங்கர மோதல்: 36 பேர் பலி, பலர் படுகாயம்!

டெகுசிகல்பா: ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் நாட்டு தலைநகர் டெகுசிகல்பா நகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள எல் பொர்வெனிர் நகரில் ஒரு சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, முக்கியமாக போதைப்பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சிறைச்சாலையில் நேற்று இரு தரப்பு கைதிகளுக்கு இடையே திடீரென பயங்கர மோதல் வெடித்தது. சிறைக்கைதிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்க தொடங்கினர். இந்த மோதலில் 18 கைதிகள் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் அங்கே விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், இந்நாட்டின் டெலா நகரில் உள்ள சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் 18 பேர் பலியாகினர், 16 பேர் படுகாயமடைந்தனர். ஹோண்டுராஸ் நாட்டில் வறுமை, ஊழல் போன்றவை தலைவிரித்தாடுகின்றன. அதன் காரணமாகவும், போதைப்பொருட்கள் கடத்தல் போன்ற சில குற்றச் சம்பவங்களினாலும் அங்குள்ள சிறைச்சாலைகள் கைதிகளால் நிரம்பி வழிகின்றன. ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள 27 சிறைச்சாலைகளில் மொத்தம் 22,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலையில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் விதமாக கைதிகள் தங்களுக்குள் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு மோதலில் ஈடுபடும் சம்பவங்கள் அங்கு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Inmates ,Honduras ,prisons ,Prison Crisis , Honduras prison, Inmates , violence, killed
× RELATED கோவை சிறை கைதிகள் 100 சதவீத தேர்ச்சி