×

குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு: சிறுபான்மையினருக்கு உள்ள சந்தேகங்களை போக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் பாஜக பிரச்சாரம்

டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து சிறுபான்மையினருக்கு உள்ள சந்தேகங்களை போக்கும் வகையில், சமூக வலைத்தளங்களிலும் பாஜக பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதில் நடந்த வன்முறைகள், தீவைப்பு சம்பவங்களில் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர்.

தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், காவல் துறையால் தாக்கப்பட்ட ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அமைதி பேரணி நடந்தது. இதேபோல்,  ஜந்தர் மந்தரில் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் திரண்டு, அமைதியாக போராட்டம் நடத்தினர். நிசாமுதீன் பாஸ்தி பகுதியில் உள்ள  முசாபிர் கானா பூங்காவில் நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். டெல்லியில் நேற்று மதியம் காங்கிரஸ் சார்பாக பிரமாண்ட போாட்டம் நடத்தப்பட இருந்தது. இதற்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமை வகிக்க இருந்தார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்க இருந்தனர். ஆனால், இதற்கு போலீஸ் அனுமதி வழங்காததால் போராட்டம் நேற்று நடைபெறவில்லை. இந்த போராட்டம் இன்று நடத்தப்பட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. தமிழகத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூரில் தொடங்கிய பேரணியில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே குடியுரிமை சட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து சிறுபான்மையினருக்கு உள்ள சந்தேகங்களை போக்கும் வகையில், சமூக வலைத்தளங்களிலும் பாஜக பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளது. மக்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் விளக்க வீடியோக்கள், கார்ட்டூன்கள் வடிவில் சமூக வலைத்தள பிரச்சாரங்கள் செய்யப்பட உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு ஏற்ப குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த அடிப்படையான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வீடியோ ஒன்றை பாஜக வெளியிட்டுள்ளது.

Tags : BJP ,campaigns ,National Citizen Record ,National Citizen , Citizenship Amendment, National Citizen Records, BJP Campaign
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...