×

சமயநல்லூர் நான்கு வழிச்சாலையில் பயன்பாடின்றி அந்தரத்தில் தொங்கும் ஹைமாஸ் விளக்குகள்

வாடிப்பட்டி: சமயநல்லூரிலிருந்து விருதுநகர், திண்டுக்கல் செல்லும் நான்கு வழிச்சாலையில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்குகள் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் சுமார் 20 மாதங்களுக்கு மேல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்பிரச்சினையில் மதுரை மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. முன்பு மதுரையிலிருந்து திண்டுக்கல் நான்கு வழிச்சாலைக்கு செல்லும் வாகனங்கள் சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் வழியாக சென்ற நிலையில் ரயில்வே மேம்பால சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு மதுரையிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சமயநல்லூரிருந்து தேனூர் சாலையில் சென்று பின் திண்டுக்கல் நான்கு வழிச்சாலையை அடையும் வகையில் சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்தும் மாற்றி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனூர் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையை அடையும் பகுதி இருள் சூழ்ந்து கிடப்பதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்தது. இதனால் சமயநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட அப்பகுதியில் 4 இடங்களில் புதிதாக ஹைமாஸ் விளக்குகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றன. அதற்காக மிகப்பெரிய உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் மின் விளக்குகள் அமைக்கும் பணியும் நடைபெற்றது.

ஆனால் புதிதாக அமைக்கப்பட்டும் ஹைமாஸ் விளக்குகளுக்கான மின்கட்டணத்தை சமயநல்லூர் ஊராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டுமென கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. ஆனால் ஊராட்சி நிர்வாகமோ அதற்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இரு நிர்வாகத்தினரும் தொடர்ந்து மோதல் போக்கினை கொண்டுள்ளதால் சுமார் 20 மாதங்களுக்கு மேல் சமயநல்லூர் நான்கு வழிச்சாலையில் அமைக்கப்பட்ட 4 ஹைமாஸ் விளக்குகளும் பயன்பாட்டிற்கு வராமல் இன்று வரை காட்சிப் பொருளாகவே உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ள அப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகளும், குற்ற சம்பவங்களும் நடக்கின்றன. மேலும் இரவு நேரங்களில் அப்பகுதி திறந்தவெளி பாராகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி நான்குவழிச்சாலை பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

நான்குவழிச்சாலை முழுவதும் கப்பலூர் டோல்கேட் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இச்சாலை பராமரிப்பு மற்றும் தேவைப்படும் இடங்களில் மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பராமரிப்பு செலவுகளுக்கும் சேர்த்துதான் டோல்கேட் நிர்வாகம் வாகன ஓட்டிகளிடம் சுங்கவரிக் கட்டணம் வசூலிக்கிறது. ஆனால் நான்கு வழிச்சாலை பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள ஹைமாஸ் மின் விளக்குகளுக்கு மின்கட்டணம் கட்டுவதில் இப்படி டோல்கேட் நிர்வாகம் பிடிவாதம் பிடிப்பது இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது மதுரை மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு 20 மாதங்களுக்கு மேல் காட்சிப் பொருளாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கும் பணியை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : lane road ,Hymas , Hymas lights
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...