×

குரங்கு தொல்லையில் இருந்து தென்னை மரங்களைக் காக்க மரங்களில் பாம்பு வரைந்து நூதன பாதுகாப்பு

ஆம்பூர்: ஆம்பூர் மற்றும் சுற்றுபகுதிகளில் தென்னைமரங்களை தொடர்ந்து குரங்குகள் சீரழித்து வருவதை காக்க அப்பகுதி விவசாயிகள் நூதன பாதுகாப்பு முறையை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தென்னை மர வளர்ப்பு  முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக தீபாவளிக்கு பின்னர் தேங்காய் விலை உயர்வு காரணமாக தென்னை மர விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால், தற்போது மாந்தோப்பு, தென்னந்தோப்பு, கொய்யாத்தோப்பு ஆகியவற்றை வைத்துள்ள விவசாயிகள் ஒரு பெரும் பிரச்னையை சந்திக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மக்கள் வசிப்பிடங்களை நோக்கியும், விவசாய நிலங்கள் மற்றும் தோப்புகளை நோக்கி வன விலங்குகளில் சில வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். யானைகள், காட்டுப் பன்றிகள் மற்றும் குரங்குகள் போன்ற வன விலங்குகளால் பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றன. யானைகள் நடமாட்டம் குறிப்பிட்ட ஒரு வனப்பகுதியை ஒட்டிய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மட்டுமே உள்ளது.  காட்டுப்பன்றிகள் குறிப்பிட்ட சில பயிர்களை மட்டுமே சேதப்படுத்துகின்றன.

ஆனால், இன்றைக்கு தென்னை விவசாயிகளுக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்திருப்பது குரங்குகள்.  குடியிருப்பு பகுதிகளில் புகுந்து ஓட்டு வீடுகள் மற்றும் ஓலை வீடுகளை சேதப்படுத்துவது . உணவு பொருட்களை எடுத்து செல்வது, தோட்டங்களில் புகுந்து பழ வகை மரங்களை சேதப்படுத்துவது என குரங்குகள் சேட்டை அதிகமாக உள்ளது.

குரங்குகளின் இந்த சேட்டையால் ஏற்படும் பாதிப்பால் மன வேதனை அடைந்த விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இந்த நிலையில்,  ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி பகுதியை சேர்ந்த விவசாயிகள் குரங்கு தொல்லைகளிலிருந்து தென்னை மரங்களை காப்பாற்ற புதிய யுத்தி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளளனர்.  ஒவ்வொரு தென்னை மரத்திலும் பாம்பு உருவங்களை , வண்ண வண்ண கலவைகளை கொண்டு வரைந்து உள்ளார்கள்.

இவ்வாறு பாம்பு உருவங்களை வரைந்த தென்னை மரங்களை நோக்கி குரங்குகள் வருவதில்லையாம். பாம்பு உருவங்கள் வரையப்படாத தென்னை மரங்களை நோக்கி இப்போது படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றன. இதனால், அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகளும் இப்போது தங்களுடைய தென்னை மரங்களுக்கு  பாம்பு உருவங்களை வரையத் தொடங்கி உள்ளார்கள்.

விவசாயிகளின் இந்த யுக்தியால் தற்போது அப்பகுதிகளில் தென்னை விளைச்சலை முழுமையாக பெறுவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த நூதன யுக்தி பற்றி அறிந்த ஆந்திர மாநில விவசாயிகள் சிலர் இதை நேரில் வந்து பார்த்தும், தங்களது பகுதிகளில் இதை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

Tags : drawing , Snake, Monkeys
× RELATED திருவள்ளூரில் நெடுஞ்சாலையில் கொரோனா: படம் வரைந்து விழிப்புணர்வு