×

நீண்ட இழுபறிக்கு பின் கோரிப்பாளையத்தில் உயர்மட்ட பாலம் கட்ட ரூ.131 கோடி அனுமதி

மதுரை: நீண்ட இழுபறிக்கு பிறகு கோரிப்பாளையத்தில் உயர்மட்ட பாலம் கட்ட ரூ.131 கோடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன் அடிக்கல் நாட்ட திட்டமிட்டுள்ளனர். மதுரை நகரில் போக்குவரத்து நெருக்கடி தீராத தலைவலியாக நீடிக்கிறது. கோரிப்பாளையம், சிம்மக்கல், யானைக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் நெருக்கடியின் உச்சத்தை சந்திக்கின்றன.  முக்கியமாக கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பில் அழகர்கோவில் சாலை, வைகை ஆற்றிலுள்ள ஏ.வி.மேம்பாலம், பனகல் சாலை. ஆழ்வார்புரம், செல்லூர் சாலை உள்ளிட்ட  11 சாலைகள் இணைகின்றன. தினமும் பஸ், கார், டூவீலர் உள்ளிட்ட 4 லட்சத்துக்கும் மேல் வாகனங்கள் கடந்து செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.  நெருக்கடிக்கு தீர்வு காண பறக்கும் பாலம் கட்டப்படும் என 2012ம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. பறக்கும் பாலத்திற்கு நில ஆர்ஜிதம், கட்டிடம் இடிப்பு உள்ளிட்ட சில பிரச்னைகளால் சிக்கலாகி முடங்கியது. சிக்கலை தீர்க்க நில ஆர்ஜித அளவை குறைத்து மறு ஆய்வு செய்யும்படி 2018ல் அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் நவீன கருவிகள் மூலம் மறு ஆய்வு நடத்தி முடித்தனர். இதன்படி  வட்ட வடிவ பறக்கும் பாலம் கைவிடப்பட்டு தலைகீழ் மாற்றம் செய்யப்பட்டது. நில அளவை குறைத்து தேவர் சிலை சந்திப்பில் வட்ட வடிவமும், அதை தொடர்ந்து அழகர்கோவில் சாலையில் உயர்மட்ட பாலமும் கட்ட திட்டம் தயாரானது. இந்த பாலம் அழகர்கோவில் சாலையில் தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகில் இருந்து ஆரம்பித்து  கோரிப்பாளையம் சந்திப்பில் வைகை ஆற்று பாலத்திற்கும், செல்லூரை நோக்கியும் இருபிரிவாக பிரிந்து செல்லும் வகையில் அமையும். அரசு மருத்துவமனை அமைந்துள்ள பனகல் சாலையில் பாலம் அமையாது. அந்த அடிப்படையில் அழகர்கோவில் சாலையில்  சுமார் ஒன்றரை கி.மீ. நீளத்தில் அமையும் இந்த உயர்மட்ட பாலத்தின் இடையில் தமுக்கம் சந்திப்பில் காந்தி மியூசியம் நோக்கியும், நேரு சிலை நோக்கியும் பிரிவு பாதைகள் உருவாகும் வகையில் அதன் வடிவம் அமைந்துள்ளது.

மொத்தம் 11 ஆயிரத்து 384 சதுர அடி பரப்பில் அமையும் இந்த பாலத்தின் மதிப்பீடு ரூ.131 கோடியாகும் என அரசுக்கு நெடுஞ்சாலைத்துறை பரிந்துரைத்தது. ஓராண்டாகியும் அந்த திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்காமல் கிடப்பில் கிடந்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு தற்போது இந்த உயர்மட்ட பாலத்திற்கு ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஒருவர் தெரிவித்தார். ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து, மாநகராட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன், கோரிப்பாளையம் உயர்மட்ட பாலத்திற்கு பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்ட திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஆமைவேகத்தில் பைபாஸ் ரோட்டில் பாலம் அமைக்கும் பணி

மதுரை பைபாஸ் ரோட்டில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி 2018ம் ஆண்டு ஜூலையில் தொடங்கியது. 15 மாதங்களில் பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.  இன்னும் பணிகள் முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மதுரை நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் முனியசாமி கூறும்போது, “பைபாஸ் ரோடு மேம்பாலம் கட்டும் பணி முடிக்க கால அவகாசம் முடிந்தும், இதுவரை பாதி  அளவுக்கு கூட பணிகள் முடிக்கப்படவில்லை. தினமும் 1 லட்சத்து 42 ஆயிரம் வாகனங்கள் கடக்கும் அந்த சாலை வாகன நெரிசலில் திணறுகிறது. தூசிமயமாகி மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். நுரையீரல் கோளாறு, காசநோய் பரவும் அபாயம் உருவாகிறது. விரைவாக பாலத்தை கட்டி முடிக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க தவறினால் நீதிமன்றத்தை நாடுவோம்” என்றார்.

Tags : bridge , The top bridge
× RELATED திருவரம்பு மாறப்பாடி பாலம் பகுதியில் பட்டுப்போன மரத்தை அகற்ற கோரிக்கை