×

தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சனி மற்றும் ஞாயிறு விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் யானை சவாரி வாகன சவாரி மூலம் வனப்பகுதிக்குள் சென்று வன உயிரினங்களையும் வனப்பகுதியின் அழகையும் ரசித்து வருகின்றனர். அத்துடன் தெப்பக் காட்டில் உள்ள யானைகள் முகாமிற்கு சென்று சவாரி செய்தும், யானைகளுக்கு உணவு வழங்கியும் மகிழ்கின்றனர்.

இதில் கடந்த சில நாட்களாக சவாரிக்கு செல்லும் யானைகள் ஒரு சிலவற்றிற்கு உடல் நலக்குறைவு காரணமாக நேற்று ஒரு யானை மட்டுமே சவாரிக்கு அனுப்பப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு பலரும் யானை சவாரி செல்ல முடியமால் ஏமாற்றமடைந்தனர்.  இந்த நிலையில் முதுமலை யானைகள் முகாமுக்கு வந்த உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூசன் குடும்பத்தினர் யானைகளுக்கு மாலைகள் வாங்கி கொடுத்தனர். இவை யானைகளுக்கு அணிவிக்கப்பட்டு உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளை சுற்றுலாப்பயணிகள் உடன் சேர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதி குடும்பத்தினரும் பார்வையிட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு என தொடர் விடுமுறைகள்  அடுத்தடுத்து வர உள்ளதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  மேலும், யானைகள் சவாரி செல்வதற்கு ஏற்ற உடல்நிலையில் இருந்தால் மட்டுமே சவாரிக்கு  யானைகள் அனுப்பப்படும் என்றும் யானைகளின் உடல் நலம் தேறியதும் சவாரிக்காக  யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் வனத்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

Tags : Tourist invasion ,elephants camp , Elephants
× RELATED ஓசூர் வனப்பகுதியில் 30 யானைகள் முகாம்: வனத்துறை எச்சரிக்கை