×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா நிறைவடைந்தும் நேற்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெற்றது. தீபத்திருவிழா நிறைவடைந்தும் பக்தர்களின் கூட்டம் அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அலைமோதி வருகிறது.

இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் குவிந்தனர். கிளிகோபுரத்திற்கு வெளியிலிருந்தே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனத்திற்கு செல்லும் வழியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 2 மணி நேரமானது. கிளிகோபுரம் அருகே முந்தி செல்வதற்காக பக்தர்கள் போட்டி போட்டதால் வரிசையில் காத்திருந்த பக்தர்களிடையே நெரிசல் ஏற்பட்டு கடும் சிரமத்திற்குள்ளாகினர். வழக்கமாக பக்தர்களை வரிசையில் செல்லவும், நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் நேற்று போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை.

மார்கழி மாதத்தையொட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களும், ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் கூட்டம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வதால் வழக்கத்தை விட நேற்று கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

கட்டண தரிசன டிக்கெட் விலை உயர்வு

கட்டண தரிசனத்தில் செல்ல வழக்கமான நாட்களில் ₹20 வசூலிக்கப்படும். பவுர்ணமி நாட்களில் ரூ.50 வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று பக்தர்கள் கூட்டம் தரிசனத்திற்கு அலைமோதியதால் கோயில் நிர்வாகம் கட்டண தரிசன டிக்கெட் விலையை உயர்த்தி ரூ.50 வசூலிக்கப்பட்டது. பக்தர்கள் விரைவாக செல்வதற்கும், விரைந்து வெளியே செல்வதற்கும் போதிய ஏற்பாடுகள் செய்திருந்தால் நெரிசலில் பெண் பக்தர்கள் சிக்கி தவிக்க மாட்டார்கள். கட்டண தரிசனத்திற்கு விலை உயர்த்திய அதிகாரிகள் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என பக்தர்கள் தெரிவித்தனர்.

Tags : Devotees ,darshan ,Swami ,Thiruvannamalai ,Thiruvannamalai Annamaliyar Temple ,Annamaliyar , Thiruvannamalai, Annamaliyar
× RELATED கோடை விடுமுறையை கொண்டாட கொளுத்தும் வெயிலிலும் குவிந்த பக்தர்கள்