×

பெத்தநாய்க்கன்பாளையம் ஒன்றியத்தில் கார்ட்டூன் மூலம் கற்றலை இனிமையாக்கும் அரசுப்பள்ளி

சேலம்: சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம் அருகே, குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மூலம் கற்றல், கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அசத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு நிலவை காட்டி சாதம் ஊட்டும் வழக்கம். ஆனால் இன்றோ, அந்த வழக்கம் முழுவதுமாக மாறி, செல்போன் மட்டும் இருந்தால் போதும் என்ற நிலை உண்டாகிவிட்டது. அந்த அளவிற்கு காலத்திற்கேற்ற நவீன மாற்றங்கள் குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை.

அதனை ஒட்டியவாறே, தனியார் பள்ளிக்கூடங்களில் கற்றல், கற்பித்தலிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டன. அப்பள்ளிகளுக்கு இணையாக, பல இடங்களில் அரசுப்பள்ளிகளும் கலக்கி வருகின்றன. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு துவக்கப்பள்ளியில், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது. சேலம் மாவட்டம், ஆத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், சுந்தரபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மிகவும் பின் தங்கிய, போக்குவரத்து வசதி கூட சரிவர இல்லாத, இந்த சிறிய கிராமத்தில் உள்ள பள்ளியில் தான், “கார்ட்டூனில் கல்வி” என்ற புதிய அணுகுமுறை, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த புதிய முறையை வடிவமைத்து, பள்ளியில் செயல்படுத்தி வரும் தலைமை ஆசிரியர் அன்பழகன் மற்றும் இடைநிலை ஆசிரியர் முல்லைவளவன் ஆகியோர் கூறியதாவது: தற்கால குழந்தைகளை மயக்கும் மாய சக்தி கார்ட்டூன்களுக்கு உள்ளது. அதன் அடிப்படையிலேயே, கார்ட்டூன் உருவங்களில் கற்றலை புகுத்த முயற்சி செய்தோம். எழுத்து, சொல், சொற்றொடர் என ஒவ்வொன்றையும் மாணவர்களே விரும்பி கற்றுக்கொள்ளவும், மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றலுக்கு முக்கியத்துவம் அளித்தும், இந்த “கார்ட்டூனில் கல்வி” கற்பிக்கப்படுகிறது. குழந்தைகளை கவர்ந்த சோட்டாபீம், காளியா, சுக்கி, ஜக்கு, ராஜூ, மோட்டு, பட்லு, டோரிமான் போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களைக் கொண்டு, பல்வேறு செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கற்பனையான கார்ட்டூன்கள் வகுப்பறை கற்றல்-கற்பித்தலை கலகலப்பாக மாற்றுவதோடு, உயிரோட்டமுள்ளதாகவும் செய்கிறது. உயிர் எழுத்துக்களுக்கு பூனை முகமூடிகள், மெய் எழுத்துக்களுக்கு புலி முகமூடிகள் என முகமூடிகளைக் கொண்டு எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

சோட்டாபீம் செயல்பாடு எழுத்துக்களின் தொடர்பை (க், க, கா, கி, கீ) அறிந்து கொள்ளவும், காளியா செயல்பாடு எழுத்துக்களின் வேறுபாடு (கெ, கே, கொ, கோ, கை) அறிந்து கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சுக்கி, ராஜூ மற்றும் ஜக்கு செயல்பாடுகள் எழுத்துகளை வலுவூட்ட உபயோகப்படுத்தப்படுகிறது. சொற்கள் சுற்றிய மத்தளங்கள், கார்ட்டூன்களின் கழுத்தில் தொங்க விடப்படும். அந்த மத்தளத்தை சுழற்றி, ஒவ்வொரு சொற்களாக மாணவர்கள் படிக்க வைப்பது, ஒருவிதமான செயல்பாடு. இதன் மூலம் ஈரெழுத்து சொற்களில் தொடங்கி, கடின சொற்கள் வரை எளிதாக கற்க முடியும்.

செய்தித்தாள்களில் வரும் பெரிய சொற்கள், மோட்டு உருவத்தில் ஒட்டப்பட்டு, விரைவாக வாசிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இவற்றில்,ஒவ்வொரு மாற்றங்களாக செய்து,புதுப்புது முறைகளை கண்டறிந்து வருகிறோம். குழந்தைகளும் ஆர்வத்துடன் இருப்பதால்,கற்றல் எளிதாக அமைகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். குழந்தைகளுக்கு பிடித்தமான புதிய அணுகுமுறை, அவர்களின் கற்றலை ஆர்வமுடையதாகவும், விருப்பமுள்ளதாகவும் மாற்றி,கற்றலை கற்கண்டாக்கும் என்பதற்கு,இந்த கார்ட்டூன் முறை சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

Tags : School for Enriching Learning ,Cartoon ,Government School , Government School
× RELATED நீட் தேர்வில் சாதனை கறம்பக்குடி அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு