×

ஓரணியாகத் திரண்டு பேரணியில் பங்கேற்போம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஓரணியாக திரண்டு பேரணியில் பங்கேற்போம் என்று திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பன்முகத்தன்மை - வேற்றுமையில்  ஒற்றுமை  என்னும் நம் பழம்பெரும் பண்பாடு மிளிரும் கருத்தாக்கத்தை  அடிப்படையாகக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் மதச்சார்பற்ற தன்மையை மாய்த்திடும் வகையிலும், மதரீதியாக  வெறுப்பை விதைத்து, பிளவுபடுத்தும் முறையிலும் மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இந்த சட்டத்துக்கு ஆதரவளித்து அதிமுக, சிறுபான்மை முஸ்லிம்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் ஆபத்தையும் அநீதியையும் உருவாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்தினை எதிர்த்து நாடு முழுவதும் கண்டன முழக்கங்கள் எழுந்து எதிரொலிக்கின்றன.

மத்தியில் ஆளுகின்ற பாஜக என்ன சொல்கிறதோ அதுதான் இன்றைய அதிமுகவின் கொள்கை, கட்டளை என்பது நாடும் ஏடும் அறிந்து நாற்றமெடுத்த ரகசியம்தான். அப்படிப்பட்ட கொள்கையைக் கொண்ட எடப்பாடி பழனிசாமி , இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கிட வலியுறுத்துவோம் என இரட்டை நிலைப்பாடு - இரட்டை நாக்குடன்  பேசுகிறார். இரட்டைக் குடியுரிமை என்றால் இந்தியாவில் ஒரு குடியுரிமை, இலங்கையில் ஒரு குடியுரிமை. இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் அதற்கான எந்த வாய்ப்பும் அளிக்கப்படாத நிலையிலேயே அதனை நிறைவேற்றிட அடிமைத்தனத்துடன் ஆதரவு அளித்து, பச்சைத் துரோகம் இழைத்த அதிமுக இலங்கையிலும் குடியுரிமை கிடைக்கச் செய்வோம் எனச் சொல்வது குடியுரிமை பற்றிய அடிப்படைப் புரிதலோ, அறிதலோ முதலமைச்சருக்கு இல்லை என்ற நகைச்சுவையையே காட்டுகிறது.

தமிழ்நாட்டில்  ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட - மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக உள்ள பல அமைப்பினரும் இந்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடும் நிலையில், மாணவர்களின் அறவழிப் போராட்டமும் நீடிக்கிறது.  இந்நிலையில்தான், திமுக சார்பில் அண்ணா  அறிவாலயத்தில் நடைபெற்ற தோழமைக் கட்சியினர் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்த பாஜக, அதை ஆதரித்த அதிமுகவின் பச்சைத் துரோகத்தையும் கண்டித்து,  அந்த சட்டத்தைத்  திரும்பப்  பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், இந்த சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டிசம்பர் 23ம் தேதி சென்னையில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி நடத்துவது என்றும் அனைத்துக் கட்சியினரும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தில் உறுதி கொண்ட - மதச்சார்பின்மைக் கொள்கையில் தளராத நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும், இளைஞர்களையும் மாணவர்களையும், திரைக்  கலைஞர்களையும், வணிகர்களையும், பல துறை சார்ந்த அனைவரையும் பேரணியில் பங்கேற்றிட அன்புடன் அழைக்கிறேன். குழிபறிக்கும் குடியுரிமைச் சட்டத்தினைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கட்சி எல்லைகளுக்கு அப்பால் ஓரணியாகத் திரண்டு பேரணியாக செல்வோம். அதனால் சென்னை குலுங்கட்டும், அது கண்டு டெல்லி அதிரட்டும். சிறுபான்மை முஸ்லிம்கள் - ஈழத் தமிழர் உள்ளிட்டோரின் உரிமைகள் மீட்சி பெறட்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Stalin ,rally , Rally, MK Stalin
× RELATED மின்தடை புகார் எண் அறிவிப்பு