×

பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 10 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்: வீட்டு உரிமையாளர் கைது; இருவர் தலைமறைவு

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகே உள்ள ஜல்லிப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்முரசு (38). இவர், செஞ்சேரிபுதூரில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு ஒன்று, அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து சாளையில் உள்ளது. தமிழ்முரசுக்கு கடன் இருந்ததால் தனது வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தார். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, தமிழ்முரசுக்கு ஏற்கனவே பழக்கமான  கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வண்ணாமடையை சேர்ந்த பிரபு (28), கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த சரவணன்(32) ஆகியோர் தமிழ்முரசின் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இரவில், ஒரு வேனில் இருந்து கேன்களை பிரபு, சரவணன் ஆகியோர் வீட்டில் இறக்கி அடுக்கி வைத்தனர்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், சாராய வாசனைபோல் உணர்ந்தனர். உடனே, சந்தேகமடைந்து மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், மதுவிலக்கு நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் நெகமம் போலீசார் சேர்ந்து, தமிழ்முரசு வீட்டை சுற்றி வளைத்தனர். வீட்டில் ஆட்கள் யாரும் இல்லை. எனினும் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் வரிசையாக கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை திறந்து பார்த்தபோது, எரிசாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 284 கேன்களில் மொத்தம் 10 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது.

அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, எரிசாராயம் பதுக்கி வைப்பதற்கு வீட்டை வாடகைக்கு கொடுத்த உரிமையாளர் தமிழ்முரசுவை கைது செய்தனர். தலைமறைவான பிரபு, சரவணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கர்நாடக மாநிலத்தில்  இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல கேன்களில் எரிசாராயம் கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

Tags : Kerala ,two ,Pollachi , Pollachi, Energy, Confiscation
× RELATED சித்திரை விசுவையொட்டி பொள்ளாச்சி...