×

அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட வன்முறையில் ஈடுபட்டவர்கள் சொத்துகள் அதிரடி பறிமுதல்: உபி. முதல்வர் யோகி நடவடிக்கை

லக்னோ: உபி.யில் நடந்த போராட்டத்தில், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் அதிரடி நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில், 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும், போராட்டம் நடத்தியவர்கள் பொது சொத்துகளை சேதப்படுத்தினர். அரசு வாகனங்கள், சொத்துகளை தீ வைத்தும் கொளுத்தினர். இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ‘போராட்டத்தின்போது பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து விற்று, அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் ஈடு செய்யப்படும்,’ என்று 2 நாட்களுக்கு முன் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

அதன்படி,  பொது சொத்துக்ளுக்கு சேதம் ஏற்படுத்தியவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகங்கள் தொடங்கி உள்ளன. சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, சம்பந்தபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். லக்னோவில் இந்த விவரங்களை சேகரிப்பதற்காக, 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. போராட்டத்தால் பாதிக்கப்பட்ட ராம்பூர், முசாபர்நகர், கான்பூர் உட்பட 20 மாவட்டங்களில் அடையாளம் காணும் நட வடிக்கை நடந்து வருகிறது. பருக்காபாத்தில் அடையாளம் தெரியாத 200 பேர், 25 அடையாளம் காணப்பட்ட நபர்களின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மவுதர்வாசாவில் 31 அடையாளம் காணப்பட்டவர்கள் மற்றும் 250 அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற மாவட்டங்களிலும் ஏராளமானோர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இது முடிந்ததும், சொத்துகள் பறிமுதல் செய்து விற்கப்பட்டு, அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஈடுசெய்யப்பட உள்ளது.

879 பேர் கைது, 135 வழக்கு பதிவு
உத்தரப் பிரதேசத்தில், போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 879 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை இயக்குனர் ஜெனரல் தெரிவித்துள்ளார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், 135 குற்ற வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Violators ,CM Yogi ,Ub , Violent, involved, property, Action seizure, Ub. CM Yogi, action
× RELATED மகளிர் பிரீமியர் லீக்: யுபி வாரியர்ஸ்...