×

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 10ம் நாளாக தொடர்கிறது போராட்டங்கள்: ராஜஸ்தானில் 3 லட்சம் பேர் பேரணி

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்றும் 10வது நாளாக போராட்டங்கள் நடந்தன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நடந்த வன்முறைகள், தீவைப்பு சம்பவங்களில் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர். உத்தர பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று முன்தினம் வரை நடந்த வன்முறைகளில் 15 பேர் பலியாகினர். இந்நிலையில், மீரட்டில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் காயமடைந்த ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம், இம்மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. இந்நிலையில், இச்சட்டத்ைத எதிர்த்து 10வது நாளாக நேற்றும் பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. அதே நேரம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அமைதி திரும்பி விட்டது.

மேற்கு வங்கத்திலும் அமைதி நிலவுகிறது. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நேற்று அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என 3 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிடவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தும் பதாகைகளை மட்டுமே ஏந்தி சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு 8 மணி முதலே இங்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. பேரணியின் முடிவில் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், “சிறுபான்மை மக்களின் மனதில் மத்திய அரசு அச்சத்தையும், பாதுகாப்பற்ற சூழலையையும் உருவாக்கி உள்ளது. அதனால், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய  வேண்டும். பாஜ.வின் தேசியவாதம் என்பது வெற்றிடமாக உள்ளது. மக்கள் அவர்களின் தந்திரங்களை நன்கு உணர்ந்துள்ளனர். அவர்கள் அராஜகத்துடன் ஆட்சி செய்கிறார்கள். பெரும்பான்மை உள்ளதால் சட்டத்தை இயற்றுகிறார்கள். ஆனால், மக்களின் மனதை அவர்களால் வெற்றி பெற இயலாது. நாடு பற்றி எரிகிறது. பாஜ ஆளும் மாநிலங்களில் எல்லாம் வன்முறை சம்பவங்கள் நிகழ்கிறது,” என்றார்.


தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், காவல் துறையால் தாக்கப்பட்ட ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அமைதி பேரணி நடந்தது. இதேபோல்,  ஜந்தர் மந்தரில் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் திரண்டு, அமைதியாக போராட்டம் நடத்தினர். நிசாமுதீன் பாஸ்தி பகுதியில் உள்ள  முசாபிர் கானா பூங்காவில் நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். உ.பி. அரசு தேர்வு ஒத்திவைப்பு: உபி.யில் போராட்டங்கள், வன்முறை காரணமாக இன்டர்நெட் முடக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை மறுதினம் நடைபெற இருந்த  துணைநிலை பணியாளர் தேர்வு ஆணைய தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனை தொடர்ந்து 24 மற்றும் 26ம் தேதி நடைபெற இருந்த ஜூனியர் உதவியாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் குடும்பங்களுக்கு 10 லட்சம்
கர்நாடகாவில் குடியுரிமை  திருத்த சட்டத்தை எதிர்த்து, தென்கனரா மாவட்டம், மங்களூருவில் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், மங்களூருவை சேர்ந்த  ஜலீல் (49), நவ்ஷின் (23) ஆகியோர் இறந்தனர். இவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் எடியூரப்பா நேரில் ெசன்று ஆறுதல் தெரிவித்ததோடு,  தலா ₹10 லட்சம் நிவாரணத் தொகையும் அறிவித்தார்.

காங். இன்று போராட்டம் சோனியா, ராகுல் பங்கேற்பு
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் நேற்று மதியம் காங்கிரஸ் சார்பாக பிரமாண்ட போாட்டம் நடத்தப்பட இருந்தது. இதற்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமை வகிக்க இருந்தார். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்க இருந்தனர். ஆனால், இதற்கு போலீஸ் அனுமதி வழங்காததால் போராட்டம் நேற்று நடைபெறவில்லை. இந்த போராட்டம் இன்று நடத்தப்பட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பீகாரில் வன்முறையில் ஈடுபட்ட 3 ஆர்ஜேடி நிர்வாகிகள் நீக்கம்
பீகாரில் நேற்று முன்தினம் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) நடத்திய முழு அடைப்பு போராட்டத்தின் போது வன்முறைகள் நடந்தன. இதில் கலந்து கொண்ட கட்சித் தொண்டர்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று கட்சி தலைமை முதலிலேயே உத்தரவிட்டு இருந்தது. ஆனால், அதையும் மீறி வன்முறையில் ஈடுபட்ட 3 பேரை, கட்சியில் இருந்து நேற்று நீக்கப்பட்டனர். இவர்கள் மாவட்ட மற்றும் இளைஞர் அணி பதவிகளை வகித்து வந்தனர்.

‘சாவதை தவிர வேறு வழியில்லை’
குடியுரிமை திருத்த சட்டத்தில், 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பாக பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த  முஸ்லிம் அல்லாத இந்து சிறுபான்மையினருக்கு மட்டும் குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில், மியான்மரில் இருந்து வந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை. இதனால், இந்தியாவில் தற்போது தங்கியுள்ள 40 ஆயிரம் ரோஹிங்கியா மக்களின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது.
டெல்லி ரோஹிங்கியா அகதிகள் முகாமை சேர்ந்த 18 வயதான இஸ்லாமிய பெண் கூறுகையில், “இந்திய குடியுரிமை வழங்கப்படாத மற்றவர்களை விட,  எங்களின் நிலைமை மிகவும் மோசமானது. நாங்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவோம். அப்படி அனுப்பப்பட்டால் சாவதை தவிர வேறு வழியில்லை. நான் அரசியலில் தலையிட விரும்பவில்லை. ஆனால், நாட்டில் தற்போது நிலவும் சூழல் எங்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது,” என்றார்.


இதேபோல், 22 வயதான சலீம் என்பவர் கூறுகையில், “மியான்மரில் வடக்கு ராக்கைன் மாகாணத்தில் துலாதுளி கிராமத்தில் உள்ள எனது வீட்டிற்கு ராணுவம் தீ வைத்தது. அதில், எனது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். நான் அவர்களின் அடுத்த இலக்காக இருந்தேன். அவர்களிடம் இருந்து தப்பி, கால்நடையாகவே வங்கதேசம் அடைந்தேன். 4 மாதங்கள் அங்கு தினக்கூலி வேலை செய்த பிறகு இந்தியா வந்தேன். இப்போது, இந்தியாவில் இருந்தும் நாங்கள் வெளியேற கட்டாயப்படுத்தப் படுகிறோம். எங்களுக்கு சாவதை தவிர வேறு வழியில்லை,” என்றார்.

பாகிஸ்தான் இந்துக்கள் மோடிக்கு நன்றி விழா
குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானில் இருந்து மத்தியப் பிரதேசத்துக்கு வந்து வசித்து வரும் ஏராளமான இந்து மக்கள் சார்பாக நேற்று நன்றி விழா நடத்தப்பட்டது. இந்தூரில் நடந்த இவ்விழாவில் பாஜ செயல் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். இதில் பங்கேற்ற இந்து மக்கள், பாகிஸ்தானில் மத துன்புறுத்தலால் தாங்கள் எதிர்கொண்ட பிரச்னைகளை நினைவு கூர்ந்தனர். சிறுமிகளும், பெண்களும் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டது போன்ற நிகழ்வுகளை கண்ணீருடன் கூறினர். குடியுரிமை திருத்த சட்டத்தால் தங்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கப் போவதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

திரிணாமுல் குழு தடுத்து நிறுத்தம்
உபி.யில் வன்முறையில் இறந்தவர்கள் குடும்பத்தினரை சந்திப்பதற்காக  திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி தினேஷ் திவேதி தலைமையிலான 4 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு நேற்று வந்தது. ஆனால், இந்த குழுவினர் லக்னோ விமான நிலையத்தில் இறங்கிதும், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் குழுவினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உபி.யில் 6 பேர் கைது
உத்தரப் பிரதேசத்தில் நடந்த வன்முறைகளுக்கு பின்னணியில், ‘பாப்புலர் பிரன்ட் இண்டியா’, ‘சிமி’ உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தொடர்பு உள்ளதாக மாநில அரசு குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக மால்டாவை சேர்ந்த 6 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

Tags : Protests ,Rajasthan , Protests , continue against , Citizenship , Amendment Act for 10 days
× RELATED எதிர்ப்பு அலையால் மக்களை...