×

குடியுரிமை சட்டத்திருத்தம் கண்டித்து ஆம்பூர், ராணிப்பேட்டை, தேனியில் ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஆம்பூர்: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நேற்றும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆம்பூர் நேதாஜி ரோட்டில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே நேற்று மாலை திமுக கூட்டணி கட்சியினர் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்எல்ஏ வில்வநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய செயலாளர் அப்துல் பாசித் உள்ளிட்டோர் பேசினர். காங்கிரஸ், மதிமுக, மமக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், அமமுக, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயக கட்சி, தமுமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, விஷாரம், கல்மேல்குப்பம், அரக்கோணம், சோளிங்கர், காவேரிப்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அனைத்து சர்ஜமாத் அமைப்பு சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி நேற்று முத்துக்கடையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்து சர்ஜமாத் தலைவர்கள்,  செயலாளர்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இவர்கள் ராணிப்பேட்டை-ஆற்காடு ரோடு சந்திப்பிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு முத்துக்கடை வந்தடைந்தனர்.

தேனியில் உலமாக்கள் பங்கேற்பு: தேனி பங்களாமேட்டில் நேற்று காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட உலமாக்கள் சபை, மாவட்ட ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு, தேனி மாவட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், சகோதர சமுதாய அமைப்புகளை சேர்ந்த பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். காலை 11 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டம் பகல் ஒரு மணி வரை நடைபெற்றது. இதனால் மதுரை ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

5,100 பேர் மீது வழக்கு: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மறியல், சட்ட திருத்த நகல் எரிப்பு என மதுரை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினர் மீது நகரில் 3,500 பேர், புறநகரில் 1,600 பேர் என 5,100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மதுரை நகரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 20 சிறுவர்கள் உள்பட 1,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Ranipettai ,demonstration ,Theni ,Ambur ,participants , Citizenship Amendment, Ambur, Ranipettai, Theni, Demonstration
× RELATED சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு...