×

ராகுல், ரோகித், விராத் விளாசல் தொடரை வென்றது இந்தியா

கட்டாக்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாத்தில் வென்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பாரபட்டி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. தீபக் சாஹர் காயத்தால் விலகிய நிலையில், வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி அறிமுக வீரராக இடம் பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
தொடக்க வீரர்கள் லூயிஸ், ஹோப் இருவரும் நிதானமாக விளையாடி 15 ஓவரில் 57 ரன் சேர்த்தனர். லூயிஸ் 21, ஹோப் 42 ரன் எடுத்து வெளியேறினர். சேஸ் - ஹெட்மயர் இணை 3வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்தது. ஹெட்மயர் 37 ரன், சேஸ் 38 ரன் எடுத்து நவ்தீப் சைனி வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் 33.3 ஓவரில் 144 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், நிகோலஸ் பூரன் - கேப்டன் போலார்டு இணைந்து இந்திய பந்துவீச்சை பதம் பார்த்தனர். இந்த ஜோடி 5 விக்கெட்டுக்கு அதிரடியாக 135 ரன் சேர்த்தது. பூரன் 89 ரன் (64 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி தாகூர் பந்துவீச்சில் ஜடேஜா வசம் பிடிபட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன் குவித்தது. போலார்டு 74 ரன் (51 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்), ஹோல்டர் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் அறிமுக வேகம் சைனி 10 ஓவரில் 58 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். தாகூர், ஷமி, ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் கடைசி 8 ஓவரில் மட்டும் 105 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, இந்திய அணி 50 ஓவரில் 316 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது. ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல் இருவரும் துரத்தலை தொடங்கினர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 21.1 ஓவரில் 122 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. ரோகித் 63 ரன் (63 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஹோல்டர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஹோப் வசம் பிடிபட்டார். அடுத்து ராகுல் - கேப்டன் கோஹ்லி ஜோடி 3வது விக்கெட்டுக்கு 45 ரன் சேர்த்தது. ராகுல் 77 ரன் (89 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), ஷ்ரேயாஸ் அய்யர் 7, பன்ட் 7, ஜாதவ் 9 ரன் எடுத்து வெளியேற, இந்தியா 38.5 ஓவரில் 228 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்தநிலையில், கோஹ்லி-ஜடேஜா ஜோடி பொறுப்புடன் விளையாடி 58 ரன் சேர்த்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி 85 ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும் இந்தியா 48.6 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. ஜடேஜா 39, சர்துல் தாகூர் 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதுடன், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடர்ச்சியாக 10வது இருதரப்பு ஒருநாள் தொடரையும் வென்று சாதனை படைத்தது.

ஓராண்டில் அதிக ரன் ரோகித் உலக சாதனை!
சர்வதேச கிரிக்கெட்டில், ஓராண்டில் அதிக ரன் குவித்த தொடக்க வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் ரோகித் ஷர்மா முதலிடம் பிடித்து உலக சாதனை படைத்தார். கட்டாக் போட்டிக்கு முன்பாக அவர் இந்த ஆண்டு விளையாடிய டெஸ்ட், ஒருநாள், டி20ல் மொத்தம் 2,379 ரன் எடுத்திருந்தார். நேற்று 9 ரன் எடுத்தபோது, இலங்கை அணி முன்னாள் தொடக்க வீரர் சனத் ஜெயசூரியா 1997ம் ஆண்டில் 2387 ரன் குவித்து படைத்த சாதனையை முறியடித்தார்.

பாரபட்டி மைதானத்தை ராசியாக்கிய கோஹ்லி!
கட்டாக் பாரபட்டி ஸ்டேடியம் ரன் மெஷின் விராத் கோஹ்லிக்கு ராசியில்லாத மைதானமாகவே இருந்து வந்தது. நேற்றைய போட்டிக்கு முன்பாக இங்கு 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20ல் விளையாடி இருந்த அவர்... 3, 22, 1, 8 ரன் மட்டுமே எடுத்திருந்தார். அதாவது 4 இன்னிங்சில் வெறும் 34 ரன். இந்திய மைதானங்களிலேயே இது தான் அவரது மோசமான செயல்பாடாக இருந்தது. மேலும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சென்னை போட்டியில் 4 ரன் எடுத்த கோஹ்லி அடுத்து விசாகப்பட்டினத்தில் கோல்டன் டக் அவுட்டாகி இருந்தார். இந்த நிலையில், நேற்று சிறப்பாக விளையாடி 85 ரன் (81 பந்து, 9 பவுண்டரி) விளாசிய அவர் பாரபட்டி மைதானத்தை ராசியானதாக மாற்றி முத்திரை பதித்தார்.


Tags : India ,Rohit ,Rahul ,Virat Valsal , Rahul, Rohit, Virat Valsal, series win, India
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...