×

பாஜ அரசு போல அனைத்து நாடுகளும் குடியுரிமை சட்டம் நிறைவேற்றினால் வெளிநாடுவாழ் இந்தியர் கதி என்னாகும்?... மதுரை சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் கேள்வி

மதுரை: ‘‘மத்திய பாஜ அரசு போல் குடியுரிமை சட்டத்தை எல்லா நாடுகளும் நிறைவேற்றினால் அங்குள்ள இந்தியர்களின் கதி என்னவாகும்?’’ என மதுரையில் நடந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கிறிஸ்துவ நல்ெலண்ண இயக்கம் சார்பில் மதுரையில் நேற்று மாலை சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடத்தப்பட்டது. விழாவுக்கு தலைமை வகித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, உங்கள் வாழ்த்துக்களையும் பெறுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன். ஏனென்றால், ெசன்னையில், நாளைய தினம் (இன்று) நடைபெறும் பேரணி, எவ்வளவு தடைகள் வந்தாலும், உடைத்தெறிந்து, வெற்றி பெற வாழ்த்து பெற வந்துள்ளேன். திமுக என்றைக்கும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். இந்தியாவில் பல்வேறு மதத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மத நம்பிக்கை அவரவர்க்கு சொந்தம். எல்லா மதமும் அன்பைத்தான் வலியுறுத்துகின்றன. வேற்றுமையை வலியுறுத்தவில்லை. இயேசு அன்பைத்தான் போதித்தார். மனிதர்கள் அனைவரும் சமம் என்பது தான் சமத்துவம். அனைவரும் சேர்ந்து வாழ்; அநீதிக்கு எதிராக குரல் கொடு. சமத்துவம், சகோதரத்துவம், நீதியுடன் அமைந்தது தான் உன்னதமான சமத்துவ நாடாகும். ஆனால், இன்றைக்கு சமத்துவம், ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் காரியங்கள் இந்திய நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. அனைவரும் சமம் என்பது குற்றமா? அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால், தேச விரோதம் என்கிறார்கள். சமத்துவம், ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து, மோசமான இந்தியாவை உருவாக்க நினைக்கிறார்கள். அதனால் தான் நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நாம் நடத்துவது பாஜக.வுக்கு எதிரான போராட்டம் அல்ல. அநீதிக்கு எதிரான போராட்டம். நாட்டின் பொருளாதாரம் பின்தங்கி உள்ளது.

விவசாயம் செழிக்கவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. புதிய திட்டங்கள் உருவாக்கப்படவில்லை. புதிய வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி இருந்தால், பாராட்டலாம். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசு அறிவித்து 4 ஆண்டுகள் ஆகிறது. மதுரையில் கடந்த ஜனவரியில் பிரதமர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இதுவரை அந்த பணிகள் துவங்கவில்லை. அதைப்பற்றி கேட்கும் ஆட்சியும் தமிழகத்தில் இல்ைல. 1955ல் நிறைவேற்றிய குடியுரிமை சட்டத்தில் பாஜக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இது அனைவருக்கும் பொருந்தும் என்றால் பாராட்டி இருக்கலாம். சிறுபான்மையினர், இஸ்லாமிய மக்களை புறந்தள்ளியதால், இதனை எதிர்த்து போராட்டம் நடத்துகிறோம். மதத்தால் மக்களை பிரிக்கிறார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து இந்துக்கள் வரலாம். இலங்கையில் இருந்து மட்டும் வரக்கூடாது என்று ஈழத்தமிழர்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். இது சிறுபான்மையினர், ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் பச்சைத்துரோகம் ஆகும்.

நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் நிறைவேற்றினார்கள். மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை. அதிமுக, பாமகவின் உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததால் தான் இந்த சட்டத்தை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடிந்தது. இதுகுறித்து டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடியிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘அது எங்கள் கொள்கை. போராடுவது மக்கள் கொள்கை’ என்று பதில் சொல்கிறார். இது தமிழர்களுக்கு இழைத்த கடைந்தெடுத்த பச்சைத் துரோகம். இதை தமிழ்நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள். மன்னிக்க மாட்டார்கள். மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்த ஒரு விழாவில் அந்நாட்டு பிரதமர், ‘இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு, இஸ்லாமியர் குடியுரிமையை பறித்து சட்டம் நிறைவேற்றி இருப்பது வேதனைக்குரியது. அப்படி ஒரு சட்டத்தை, மோடி போல் நாங்கள் கொண்டு வர மாட்டோம்’ என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவை போன்று ஒரு சட்டத்தை எல்லா நாடுகளும் கொண்டு வந்தால், அந்தந்த நாடுகளில் வாழும் இந்தியர்கள், தமிழர்களின் கதி என்ன? அவர்களின் குடும்பம் என்னவாகும்? அதற்காகத்தான் அரசியலுக்கு அப்பாற்பட்டு, அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி, ஜனநாயகம், சமத்துவம் காக்க, நீதிக்காக சென்னையில் போராட்டம் நடத்துகிறோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பேராயர்கள் அந்தோணி பாப்புசாமி (கத்தோலிக்), ஜோசப் (தென்னிந்திய திருச்சபை), முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ், மயிலை முன்னாள் பேராயர் சின்னப்பா, பேராயர் எஸ்றா சற்குணம், பிரம்மகுமாரிகள் சபை செந்தாமரை, வில்சன் எம்பி, அய்யாவழி சமய தலைவர் பாலபிரஜாபதி அடிகளார், அரபுக்கல்லூரி முதல்வர் முப்தி முகமது ரூஹில் ஹக் ரஷாதி காஸிமி உள்பட பலர் பேசினர். விழாவில் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மும்மதங்கள் சார்ந்த நடன நிகழ்ச்சி நடந்தது.

Tags : countries ,BJP ,Indians ,Stalin ,government ,Madurai Equality Christmas Festival ,NRIs , Baja Government, Citizenship Act, Madurai Equality Christmas Festival, MK Stalin
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...