×

பொருளாதார சரிவால் டீசல் தேவை படு மந்தம்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் பெட்ரோலிய பொருட்கள் விற்பனை 216 மில்லியன் டன்களாக இருக்கும் என, பெட்ரோலிய அமைச்சகத்தின் பெட்ரோலிய பொருட்கள் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு மதிப்பீடு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 1.3 சதவீதம் மட்டுமே அதிகம். கடந்த 2013-14 நிதியாண்டில் பெட்ரோலிய பொருட்களின் தேவை 0.9 சதவீதம் மட்டுமே அதிகரித்திருந்தது. அப்போது கச்சா எண்ணெய் பேரல் 100 டாலருக்கு விற்றது. இதன்பிறகு தற்போதுதான் இத்தகைய மந்த நிலை ஏற்பட உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத  பொருளாதார சரிவால் கார் தொடங்கி வீடு விற்பனை வரை கடும் பாதிப்பை அடைந்துள்ளது.

தொழில்துறை உற்பத்தி கடந்த அக்டோபர் மாதத்தில், தொடர்ந்து 3வது மாதமாக சரிவை சந்தித்துள்ளது. உள்கட்டமைப்பு, கட்டுமான பொருட்கள், மூலதன பொருட்கள் உற்பத்தி சார்ந்த துறைகளில் உற்பத்தி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம். பிட்ச் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், பொருளாதார மந்த நிலையால் பெட்ரோலிய பொருட்கள் தேவை குறையும் என கூறியிருந்தது. பெட்ரோலிய பொருட்களில் டீசல் பயன்பாடுதான் மிக அதிகமாக இருக்கும். ஏனெனில், உற்பத்தி துறை, போக்குவரத்து, விவசாயம் ஆகிய துறைகளுக்கு மிக அத்தியாவசிய தேவையாக இது உள்ளது. இருப்பினும் தொழில்துறைகள் அனைத்தும் முடங்கிய நிலையில் டீசல் தேவை 0.9 சதவீத வளர்ச்சியையே எட்டும். இது  6 ஆண்டுகளில் இல்லாத கடுமையான மந்த நிலையாகும் என தெரிவித்துள்ளது.

Tags : downturn ,recession , economic downturn, diesel demand, recession, study data
× RELATED உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது: நிர்மலா சீதாராமன் உரை