×

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து எதிர்க்கட்சிகள் வதந்தி பரப்புகின்றன: டெல்லி பிரமாண்ட கூட்டத்தில் மோடி ஆவேசம்

புதுடெல்லி: ‘‘குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து மக்களிடம் எதிர்க்கட்சிகள் வதந்தியை பரப்புகின்றன,’’ என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது, டெல்லி-என்சிஆரில் உள்ள 1,731 அங்கீகாரமற்ற காலனிகளை  முறைப்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், இந்த காலனிகளில் வசிக்கும் 40 லட்சம் மக்கள், தாங்கள் வசித்து வரும் இடத்திற்கு உரிமையாளராகும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் பிரமாண்ட விழாவையும், இந்த மக்களுக்கு ஒரே நேரத்தில் பட்டா வழங்கும் விழாவையும் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பாஜ நேற்று நடத்தியது. டெல்லியில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

அதற்கான பிரசாரத்தை தொடங்கும் விதமாக இந்த பிரமாண்ட விழாவை பாஜ நேற்று நடத்தியது. இந்த விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது: வேற்றுமையில் ஒற்றுமையில் காண்பதுதான் இந்தியாவின் சிறப்பு. அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலை சந்தித்தவர்களுக்கு உரிமைகள் வழங்குவதுதான் குடியுரிமை திருத்த சட்டம். இது, இந்தியாவில் உள்ள யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை. சிறுபான்மையினரை பாகுபாட்டுடன் பாகிஸ்தான் நடத்துவதை வெளிப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அது, எதிர்க்கட்சிகளின் அரசியலால் நழுவி போய்விட்டது. முஸ்லிம்கள் எனது அரசின் சாதனைகளை பார்க்க வேண்டும், எதிர்க்கட்சிகள் கூறுவதை கேட்கக் கூடாது. இலவச காஸ் சிலிண்டர்கள், சுகாதார திட்டத்தை நாங்கள் ஏழைகளுக்கு வழங்கியபோது, அவர்கள் கோயிலுக்கு போகிறார்களா? மசூதிக்கு போகிறார்களா? என்பதை பார்க்கவில்லை.

குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. அதனால், அவர்கள் இதை பற்றி கவலைப்பட தேவையில்லை. முஸ்லிம்கள் தடுப்பு காவல் மையத்துக்கு அனுப்பப்படுவார்கள் என காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும், ‘நகர்ப்புற நக்சல்களும்’ வதந்தியை பரப்புகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கும், இந்தியர்களுக்கும் உண்மையிலேயே எந்த சம்பந்தமும் இல்லை.  ஊடுருவல்காரர்கள் தங்களை ஒரு போதும் வெளிக்காட்ட மாட்டார்கள். அகதிகள் ஒரு போதும் தங்கள் அடையாளத்தை மறைக்க மாட்டார்கள். எதிர்க்கட்சியினர் அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாமல், ஓட்டு வங்கி அரசியலுக்காக நாட்டை பிளவுபடுத்துகின்றனர்.  தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பொய்கள் பரப்பப்படுகின்றன. இதை கொண்டு வந்ததே முந்தைய காங்கிரஸ் அரசுதான். இது குறித்து நாடாளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவையிலோ எனது அரசு விவாதிக்கவில்லை. அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களை சந்திக்கும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் என பல காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது அளித்த வாக்குறுதியைத்தான் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இப்போது நிறைவேற்றி இருக்கிறது. ஊடுருவல்காரர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தற்போதைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார். ஆனால், ஓட்டு வங்கி அரசியலுக்காக, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.

முஸ்லிம் நாடுகள் எல்லாம் எனக்கு உயர்ந்த விருது அளித்து கவுரவிக்கின்றன. இது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை அச்சம் அடையச் செய்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் என்னை ஆதரித்தால், எனக்கு எதிராக இந்திய முஸ்லிம்களை எப்படி திருப்பி விட முடியும் என அவர்கள் கவலை அடைகின்றனர். அதனால்தான், எனக்கு எதிராக பிரசாரம் செய்கின்றனர். என்னை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காகத்தான் எதிர்க்கட்சியினர் இதையெல்லாம் செய்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளாகவே, என்னை குறிவைத்து இந்த முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவர்கள் ஒரு போதும் வெற்றி பெற்றதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

‘என் உருவ பொம்மையை எரியுங்கள் பொது சொத்துகளை விட்டு விடுங்கள்’
மோடி மேலும் பேசுகையில், ‘‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வன்முறை பரவியபோது, அமைதி காக்கும்படி எதிர்க்கட்சிகள் எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை. பள்ளி பேருந்துகளையும், ரயில்களையும் எரிக்கும் வன்முறைக்கு மறைமுக ஆதரவு தெரிவிப்பதற்காக அவர்கள் அமைதி காத்தனர். இந்த வன்முறையில் மக்களுக்கு உதவியது போலீசார்தான். அவர்களின் பணி பாராட்டுக்குரியது. எதிர்க்கட்சிகள் விரும்பினால் எனது உருவபொம்மையை எரித்து, செருப்பால் கூட அடிக்கட்டும். ஆனால், அவர்கள் பொதுமக்களுக்கும், பொதுச் சொத்துகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது,’’ என்றார்.

3 ஆயிரம் வாகனங்களில்...
டெல்லியில் பாஜ நேற்று நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதற்காக பாஜ தொண்டர்களும், மக்களும் 3 ஆயிரம் வாகனங்களில் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். டெல்லி காலனிகளை சேர்ந்த மக்களும் திரளாக திரண்டதால், டெல்லி மாநகரமே திக்குமுக்காடியது.

பிரதமரின் குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சி மறுப்பு
எதிர்க்கட்சிகள்தான் பொதுமக்களை போராட்டத்துக்கு தூண்டுகின்றன என்ற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறுகையில், ‘‘உள்துறை அமைச்சர்தான் நாட்டில் பயத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கி உள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தொடர்ந்து குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்புதான் இந்த போராட்டத்துக்கு காரணம். இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். உண்மையிலேயே இப்பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடி கவலைக் கொண்டிருந்தால், உடனடியாக அவர், தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்’’ என்றார்.

Tags : Modi , Citizenship, Amendment Act, National Citizen's Registry, Modi
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...