×

சென்னை - வாலாஜா சாலை சீரமைப்பை ஐகோர்ட் உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் சத்தியநாராயணா, தமது பயண அனுபவத்தின் அடிப்படையில் சென்னை மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலை மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், இதுகுறித்து உயர் நீதிமன்றமே பொதுநல வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் தலைமை நீதியரசருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனடிப்படையில், உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, சென்னை - வாலாஜாபேட்டை சாலையின் தரத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து ஆணையிட்டிருக்கிறது. 2004ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த சாலை அதன்பிறகு கடந்த 15 ஆண்டுகளில் ஒருமுறை கூட, மீண்டும் முழுமையாக அமைக்கப்படவில்லை, என்பது அந்த சாலையில் சுங்கவரி செலுத்தி செல்லும் மக்களை முட்டாள்களாக்கும் செயல் என்பது மட்டுமின்றி, அலட்சியத்தின் உச்சகட்டமும் ஆகும்.

இச்சாலையில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க மத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திற்கு பலமுறை கடிதம் எழுதியும் அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இந்த சாலையில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பில் அக்கறை இல்லை என்பதை  இது காட்டுகிறது. சென்னை - வாலாஜாபேட்டை சாலையின் தரத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம் செய்யப்பட்டிருப்பது இந்த விஷயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகும். அவரது ஆய்வுக்கு பிறகு தேவைப்பட்டால் உயர்நீதிமன்ற நீதிபதிகளும் சென்னை - வாலாஜாபேட்டை சாலையில் பயணித்து  ஆய்வு செய்ய வேண்டும். தேவையான ஆணைகளை பிறப்பித்து சாலையின் தரத்தை உறுதி செய்ய  வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : ICT ,Ramadas ,Highcourt , Madras - Walaja, Road Alignment, highcourt to ensure, Ramadas, emphasis
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...