×

வாலாஜாபாத் அருகே கோயிலை பிரபலப்படுத்துவதற்காக பாம்புடன் நடனமாடி வீடியோ வெளியிட்ட பெண் சாமியார் சிறையில் அடைப்பு

சென்னை: வாலாஜாபாத் அருகே கோயிலை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் பாம்புடன் நடனமாடி சமூகவலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட பெண் சாமியார் சிறையில் அடைக்கப்பட்டார். காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத், வெள்ளேரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கபிலா (39). இவர், அதே பகுதியில் வனபத்ரகாளி அம்மன் கோயிலை நிர்வகித்து பக்தர்களுக்கு குறிசொல்லி வருகிறார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு கோயில் கும்பாபிஷேகத்தின்போது ஒரு பாம்பை அம்மனின் கழுத்தில் வைத்தும் தனது உடம்பில் போட்டுக் கொண்டும் நடனமாடியபடி பாம்புக்கு பாலாபிஷேகம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதன்பிறகு கபிலாவும் அந்த கோயிலும் பிரபலமானதால் பக்தர்கள் வருகை அதிகரித்தது.

இந்தநிலையில், கபிலா, பாம்புடன் நடனமாடும் வீடியோ பதிவு சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாக பரவியது. இதை பார்த்து பக்தர்கள் பரவசமும் பக்தியும் அடைந்தனர். இந்த வீடியோ பார்த்து செங்கல்பட்டு மாவட்ட வனச்சரக அலுவலர் பாண்டுரங்கன் தலைமையில் குழுவினர் நேற்று முன்தினம் மாலை வாலாஜாபாத் வந்து கபிலாவிடம் விசாரித்தனர். அப்போது அவரிடம் இந்த பாம்பு எங்கிருந்து பிடித்து வரப்பட்டது, எங்கே மறைத்து வைத்துள்ளீர்கள்’’ என்று கேட்டனர். ஆனால், இதற்கு கபிலா முறையான பதிலை தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து வனவிலங்கு தடுப்பு சட்டத்தின்கீழ் கபிலாவை கைது செய்தனர்.

பின்னர், அவரை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மகளிர் சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்து வனசரக அலுவலர் பாண்டுரங்கன் நிருபர்களிடம் கூறுகையில், ‘வாலாஜாபாத் வெள்ளேரி அம்மன் கோயில் பகுதியில் வன பத்ரகாளியம்மன் கோயிலிலை நிர்வாகித்து வருபவர் கபிலா. இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகத்தை தொடர்ந்து சர்ப பூஜைக்காக வாடகைக்கு நல்லபாம்பை கொண்டு வந்துள்ளார். அப்போது, அவர், பக்தர்கள் பரவசம் அடையும் வகையில், விளம்பரத்திற்காகவும், பக்தர்களை கவரும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது தெரியவந்தது.

மேலும், பாம்பை வைத்து துன்புறுத்தும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட கபிலாவிடம் விசாரித்தோம். அவர், பாம்பு கொண்டு வந்தவர்கள் குறித்தும், பாம்பு துன்புறுத்தப்பட்டது குறித்தும் எந்தவித முறையான பதிலும் அவர் செல்லவில்லை. பின்னர், கபிலாவை கைது செய்தோம். மேலும், பாம்பு கொண்டு வந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : temple ,Walajabad Woman ,Walajabad , Walajabad, dancing with the snake, the female preacher
× RELATED முக்கட்டி மாரியம்மன் கோவில் திருவிழா...