×

திமுக பேரணி எதிரொலி... எம்டிசி டிரைவர்கள், கண்டக்டர்கள் விடுப்பு எடுக்க கூடாது: மேலாண் இயக்குனர் சுற்றறிக்கையால் பரபரப்பு

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, சென்னையில் திமுக தலைமையில் இன்று பேரணி நடைபெறவுள்ள நிலையில், மாநகர போக்குவரத்து தொழிலாளர்கள் விடுப்பு எடுக்க தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாபெரும் பேரணி நடக்கிறது. இந்த பேரணியில் தி.க தலைவர் வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உட்பட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் இப்பேரணியில் பல்வேறு அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளன. இந்நிலையில் மாநகர போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை பேரணியில் கலந்து கொள்ளும் பட்சத்தில், பஸ்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையில், மாநகர போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நாளை விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் திடீரென சுற்றறிக்கை ஒன்றை, அனைத்து தொழிலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநகர் போக்குவரத்து கழகம் ஒரு அத்தியாவசியமான போக்குவரத்து சேவையை முழுவதுமாக பொறுப்பேற்று நடத்தும் நிறுவனம் என்பதும், பொதுமக்களுக்கு அன்றாடம் சேவை செய்யக்கூடிய முக்கியமான பொறுப்புள்ள நிறுவனம் என்பதும் நமது தொழிலாளர்கள் அனைவரும் நன்கு அறிந்ததாகும்.

எனவே, தொழிலாளர்கள் அனைவரும் வருகின்ற 23ம் ேததி (இன்று) வழக்கம் போல் பணிக்கு தவறாமல் ஆஜராக வேண்டுமென இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. 23.12.2019 அன்று வழங்கப்பட்ட விடுப்புகள் யாவும் இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது மற்றும் வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு ஆஜராக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. எனக்கூறப்பட்டுள்ளது.

5,000பேர் பங்கேற்க வாய்ப்பு
இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தி.மு.க தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் நிச்சயம் பங்கேற்பார்கள். நாளை நடைபெறும் பேரணியை பலவீனப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கையை மேற்கொள்கிறது. அதேபோல் மாநகர போக்குவரத்து கழகம் போன்ற அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை கிடையாது. விடுமுறை அளித்திருந்தாலும் அதுவும் ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது. ஆனால் 4,000-5,000 பேர் வரை இதில் பங்கேற்பார்கள். மற்ற தொழிற்சங்கத்தினரும் கலந்து கொள்கின்றனர்’’ என்றார்.

Tags : rally ,DMK ,drivers ,conductors ,MTC ,Managing Director , DMK rally, MTC drivers, conductors, should not take leave
× RELATED கொரோனாவை எதிர்கொள்ள கட்சி...