×

ஓரம்கட்டப்படும் வேலூர் மாவட்டம் தேசிய தரச்சான்று பெற்றும் முடங்கியுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம்: அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மாணவர்கள்

திருவலம்: 12பி அந்தஸ்துடன், தேசிய தரச்சான்று பி கிரேடு பெற்றும் அடிப்படை வசதிகள் இன்றி வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மாணவ, மாணவிகள் தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என கலை, அறிவியல் பல்கலைக்கழகங்களும், தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களும், மருத்துவபல்கலைக்கழகங்களும் என அரசு மற்றும் நிதியுதவி, தனியார் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இதில் சென்னை பல்கலைக்கழகத்தின் முதுகலை விரிவாக்க மையம் வேலூர் கோட்டையில் இயங்கி வந்தது. இந்த நிலையில் வேலூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, கோட்டையில் இயங்கி வந்த பல்கலைக்கழக விரிவாக்க மையத்தினை பல்கலைக்கழகமாக மாற்ற அரசு முடிவு செய்தது. அதன்படி தமிழகஅரசு கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தொடங்கியது. தொடக்க காலத்தில் இப்பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளுடன், விலங்கியல், பொருளாதாரம், வேதியியல் போன்ற முதுநிலைப்பாடபிரிவுகள் நடத்தப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த சேர்க்காடு ஊராட்சிக்குட்பட்ட சென்னை- சித்தூர் தேசிய நெடுஞ்சாலையோரம் சுமார் 112 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு புதிய பல்கலைக்கழக கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2010ம் ஆண்டு டிசம்பரில்  அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. தமிழ், கணிதம், ஆங்கிலம், விலங்கியல், உயிரிதொழிற்நுட்பவியல், வேதியியல், பொருளாதாரம் என 7 பாடப்பிரிவுகளில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 128 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வந்த நிலையில் தற்போது மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதில் கூடுதலாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி என மொத்தம் 7 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

 இப்பல்கலைக்கழத்துடன் அயல்நாடு மற்றும் இந்திய பல்கலைக்கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியன 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு வெளியூர்களில் இருந்து ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபடும் ஆராய்ச்சியாளர்களும் இங்கு தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடவும், அனைத்துத்துறை முதுகலை, இளங்கலை மாணவ, மாணவிகளும் தங்களுக்கான தனித்தனி விடுதி வசதியின்றி பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். தங்கும் விடுதி வசதி இல்லாததால் இப்பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தயக்கம் காட்டுகின்றனர். பல்கலைக்கழகத்துக்கு என புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல்கலைக்கழகம் முறையாக இயங்கத்தொடங்கி 10 ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும் இங்கு மாணவ, மாணவிகளுக்கான விடுதி வசதி இல்லாத காரணத்தால் மாணவர் சேர்க்கையில் முன்னேற்றமின்றி பல்கலைக்கழகமும் வளர்ச்சிப்பாதையில் செல்ல முடியாமல் தவித்து வருகிறது. பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களின் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு அலுவலக பணிகளுக்காக தங்களது பகுதியில் இருந்து பேருந்துகளில் வேலூருக்கு வந்து அங்கிருந்து பல்கலைக்கழகத்திற்கு வந்து செல்லவும் மாவட்டத்தின் பிறபகுதிகளில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் பல்கலைக்கழத்திற்கு வந்து திரும்பிச் செல்ல பேருந்து வசதி இல்லாத காரணத்தாலும் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அத்துடன் பல்கலைக்கழக மைய நூலகத்தில் பாடங்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி புத்தகங்களை ஆராய்ச்சியாளர்கள் மாலை வேளையில் படித்து தகவல்களை பெற்றுக் கொண்டு மீண்டும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான பேருந்துகள் இல்லாத காரணத்தால் நூலகத்தினை உரிய முறையில் பயன்படுத்தப்பட முடியாமல் அவசர கதியில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

இதுதவிர பல்கலைக்கழக மாணவ, மாணவிகளை விளையாட்டுத்துறையில் ஊக்குவிக்க உரிய விளையாட்டு மைதானம் சீரமைத்து கட்டப்படாததால் விளையாட்டு போட்டிகளில் பங்கு கொள்ளவும், உரிய பயிற்சி எடுக்கவும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளை நடத்தவும் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மைதானம் இல்லாத காரணத்தால் இப்பல்கலைக்கழகம் விளையாட்டுத்துறையிலும் பின்தங்கியுள்ளதாக வேதனை குரல்கள் எழுந்து வருகின்றன. எனவே, தங்கும் விடுதி வசதியும், கணினிமயமாக்கப்பட்ட உயர்தொழில்நுட்ப வசதியுடன் தற்கால சூழலுக்கேற்ற நூலக வசதி, ஆய்வக வசதி, ஆராய்ச்சியாளர்களுக்கான வசதி, விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்வதற்கான விளையாட்டு உபகரணங்களுடன், விளையாட்டு மைதான வசதி, பல்கலைக்கழகத்துக்கென சிறந்த ஆடிடோரியம், விருந்தினர் இல்லம், டிஜிட்டல் திரைகளுடன் கூடிய வகுப்பறைகள், கேன்டீன் வசதி, போக்குவரத்து வசதி என அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் மட்டுமின்றி, மாணவ, மாணவிகள் மற்றும் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கூறுகையில், ‘நாங்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து நாள்தோறும் பல்கலைக்கழகத்திற்கு வந்து செல்ல உரிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறோம்.

மேலும் சரியான நேரத்திற்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால் மாணவிகள் மாலை நேரங்களில் அச்சத்துடன் பேருந்திற்காக காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுதவிர விளையாட்டு மைதானம், உயர்தொழில்நுட்ப வசதியுடன் கூடிய நூலகம், வகுப்பறைகள், விடுதி வசதிகள் என பல்வேறு வசதிகளை இப்பல்கலைக்கழகத்துக்கு ஏற்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்தனர். பல்கலைக்கழக பதிவாளர் வெ.பெருவழுதி கூறுகையில், ‘மாணவ, மாணவிகளின் பல்வேறு சிரமங்களை கருத்தில் கொண்டு விரைவில் பல்கலைக்கழகம் சார்பில் முதற்கட்டமாக 2 பேருந்துகள் வாங்கப்பட்டு, வேலூர் மற்றும் ராணிப்பேட்டைக்கு சென்று வர இயக்கப்படவுள்ளது. அதேபோல் விளையாட்டுதுறையை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு மைதானம் சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டு படிப்பயாக விளையாட்டு போட்டிகளுக்கான மைதானங்கள் அமைக்கப்படவும் உள்ளது. ஆண்கள், பெண்களுக்கான தனிதனி விடுதிகளுக்கான கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. முதற்கட்டமாக பெண்களுக்கான தங்கும் விடுதி கட்ட டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது. வரும் கல்வியாண்டில் இருந்து முதுகலை பாடப்பிரிவுகளில் இயற்பியல், வணிகவியல், கணினிஅறிவியல் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது’ என்றார்.

Tags : Vellore District ,Thiruvalluvar University , Thiruvalluvar, University ,National Certificate, Vellore District
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...