×

30 அடிக்கும் மேலாக மணல்மேடாக மாறிய கடனாநதி, ராமநதி அணைகள்: தூர் வார மறந்த அதிகாரிகள்

கடையம்: கடையம் அருகே அமைந்துள்ள கடனாநதி, ராமநதி அணைகள், கடந்த 27 ஆண்டுகளாக  தூர்வாரப்படாததால் 30 அடிக்கும் மேலாக மணல் மேடாக மாறி காட்சி அளிக்கிறது. கடையம்  மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் ராமநதி, கடனாநதி அணைகள் அமைந்துள்ளன. கடையம், ஆழ்வார்குறிச்சி  பகுதியில் வற்றாத ஜீவ நதியாக ராமநதியும், கடனா நதியும் உள்ளது. இதனை நம்பி 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாய  குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். ராமநதி அணையின்  மூலம் 33 குளங்களும்,  கடனா நதி மூலம் 83 குளங்களும் பயன்பெற்று  வருகிறது.  இந்த இரு அணைகளை விவசாயம் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்காக 1974ம் ஆண்டு  அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். ராமநதி அணை 96 ஏக்கர்  பரப்பளவில் 84 அடி கொள்ளளவு கொண்டது. இதில் 152 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்க முடியும். இந்த அணையின் மூலம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு  கடையம், கீழக்கடையம், மேலக்கடையம், ரவணசமுத்திரம், பொட்டல்புதூர்,  கோவிந்தபேரி, மந்தியூர், ராஜாங்கபுரம், பிள்ளையார்குளம், வீராசமுத்திரம்,  மீனாட்சிபுரம், வாகைகுளம், பாப்பான்குளம் ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட  4943.51 விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் சுற்று வட்டார  கிராமங்களின் ஒரு லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து  வருகிறது.

85 அடி முழு கொள்ளளவு கொண்ட கடனா நதி அணை 2645 மீட்டர்  பரப்பளவில் உள்ளது. இந்த அணையில் 428.52 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணையின் மூலம் தர்மபுரம் மடம், சிவசைலம்,  ஆழ்வார்குறிச்சி, மேல ஆம்பூர், கீழ ஆம்பூர், மன்னார்கோயில்,  திருவாலீஸ்வரம், பிரம்மதேசம், பள்ளக்கால் பொதுக்குடி, பனஞ்சாடி,  ரங்கசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் விவசாய  நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை  பூர்த்தி செய்கிறது.ராமநதி மற்றும் கடனா நதி அணை  நீர்ப் பிடிப்பு  பகுதியில் கடந்த 1992ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போதும், 2017ல் ஓகி  புயலின் போது கொட்டி தீர்த்த மழையில்  பாறாங்கற்கள், மரங்கள், மணல் அடித்து  வரப்பட்டு அணைகளில்  சேர்ந்தன. இதனால் அணைகளில் சுமார் 30 அடி வரை மணல்,  பாறாங்கற்கள், மரம் ஆகியவை நிரம்பி மண் மேடாக காட்சியளித்து வருகிறது. இதனால் 30 அடிக்கு மேல் தான் தண்ணீர் தேக்கி வைக்கும் நிலை இருப்பதால் அணையின்  முழு கொள்ளளவுக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது.இதற்கு முன்னர் ஜூன் மாதத்தில் கடனாநதி, ராமநதி அணையிலிருந்து  தண்ணீர் திறக்கப்பட்டு நாற்று நட்டு விடுவர். ஆனால் கடந்த சில வருடங்களாக  பருவம் தப்பி  பருவ மழை பெய்து வருகிறது. இதனால் அணையில் 60 அடிக்கும் மேல் இருந்தால் தான் தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. இதனால் காலம் தவறி மழை  பெய்தாலும் அணையில் 40 சதவீதம் பகுதியில் மணல் தேங்கி இருப்பதால் விரைவில் அணை  நிரம்பி தண்ணீர் விரயமாகி வருகிறது. கடந்த 2016ம்  ஆண்டு இரண்டு பருவ மழைகள் பொய்த்துப் போனதால் பயிர்கள் தண்ணீரின்றி கருகி விட்டது. எனவே அணையை தூர்வாரினால் அதிக  அளவில் தண்ணீரை தேக்கி காலத்திற்கேற்ப பயிர் செய்ய முடியும்.

இதுபற்றி கடையத்தை சேர்ந்த பூலோக பாண்டியன் என்ற  சாரதி கூறுகையில் ராமநதி மற்றும் கடனாநதி ஆற்றில் உள்ள உறை கிணறுகள் மூலம் பல   லட்சம்   மக்கள் குடிநீர் பெற்று வருகின்றனர். மழை காலத்தில் இந்த  ஆற்றில் வெள்ளப் பெருக்கும், கோடை காலத்தில் வறண்டும் காட்சியளித்து  வருகிறது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் கிடைக்காமல் ெபாதுமக்கள் அவதிப்பட்டு  வருகின்றனர்.  அணையை முறையாக தூர்வாரினால் கோடை காலத்திலும் அனைத்து  மக்களுக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்க முடியும் என்றார்.தமிழ்நாடு விவசாய  சங்கத்தின் மாவட்ட துணை தலைவர்  ராமகிருஷ்ணன்  கூறுகையில், கடையம், ராமநதி  அணைகளில் கடந்த 27 ஆண்டுகளாக அணையில் முழு கொள்ளளவு நீரை சேமிக்க   முடியவில்லை. இதனால் மழை குறைந்த காலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை   ஏற்பட்டுள்ளது. கடந்த 2013ல் அணையை தூர் வாருகிறோம் என்ற பெயரில்  கண்துடைப்புக்காக அணையிலிருந்து மணல் அள்ளிச்  சென்றனர். முறையாக அணையை  தூர் வாரினால் சுற்று வட்டார பகுதி விவசாயிகளுக்கு பாசன ஆதாரமும்,  பொதுமக்களுக்கு குடிநீர் தேவையும் உறுதி செய்யப்படும் என்றார்.இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையும், வடகிழக்கு பருவ மழையும் கொட்டித்  தீர்த்தது. இதனால் ராமநதி , கடனாநதி அணைகள் பல முறை நிரம்பியது. உபரி தண்ணீர் ஆற்றில் திறக்கபட்டு கடலில் சென்று வீணாக கலக்கிறது. ராமநதி  மற்றும் கடனா நதி  அணைகளை தூர்வார வேண்டும் என்பது விவசாயிகள் மற்றும்  கடையம், ஆழ்வார்குறிச்சி சுற்றுவட்டார மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையாகும். எனவே வரும் கோடை காலமான ஏப், மே மாதங்களில் இரு அணைகளையும் தூர்வாரினால் 2020  தென்மேற்கு பருவ மழையில் அதிக கொள்ளளவில் தண்ணீரை தேக்க முடியும் என நம்பப்படுகிறது.

திட்ட மதிப்பீடு தயார்
இதுகுறித்து தென்காசி  சிற்றாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் மதன சுதாகர் கூறுகையில், கடையம்  ராமநதி அணையை தூர்வார ரூ.6.5 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு  அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் ராமநதி மற்றும் கடனாநதி அணைகளை தூர் வார விரைவில்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விரயமான தண்ணீர்
ராமநதி  அணையின் 84 அடி முழு கொள்ளளவு மூலம்  152 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்க முடியும். ஆனால்  30 அடிக்கு அணையில் மண் கிடப்பதால் 116  மில்லியன் கன அடி தண்ணீர் தான் சேமிக்க முடிகிறது. இதனால் 27 ஆண்டுகளில் 48 மடங்கு  தண்ணீர்  வீணாகியுள்ளது.  இந்த அணை தூர் வாராததால் கடந்த 27 ஆண்டுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மில்லியன் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது என்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடனாநதி அணையில் 428 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்க முடியும். அணை தூர் வாராதால்   335 மில்லியன் கன அடி தண்ணீர் தான் சேமிக்க முடிகிறது.  கடந்த 27  ஆண்டுகளில் 30 மடங்கு தண்ணீர் அதாவது 9 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர்  வீணாக சென்றுள்ளது.

முதல்வரின் அறிவிப்பு
வெற்று அறிவிப்பானது
நெல்லையில்  கடந்த ஆ ண்டு நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ராமநதி மற்றும் கடனா நதி  அணைகள் தூர்வாரப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  ஆனால் இன்று வரை அது வெறும் அறிவிப்பாகவே உள்ளது. இதுவரை இரு அணைகளையும் தூர்வார எந்த ஒரு  நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.

Tags : Kadananadi ,Ramanadi Dam ,Sand dunes , 30 feet, Kadananadi, Ramanadi , Sand dunes
× RELATED தீவினைகள் களையும் ஸ்ரீ பிரணவேஸ்வரர்