×

மதுரவாயல்-வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலையை ஆய்வு செய்து அறிக்கை தர வக்கீல் கமிஷனர் நியமனம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  மதுரவாயல்-வாலாஜாபேட்டை சாலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல் கமிஷனரை நியமனம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தாம்பரம் - திண்டிவனம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய  உரிமம் கடந்த நவம்பர் 8ம்  தேதியுடன் காலாவதி ஆனது.  இதனால், இந்த சுங்கசாவடிகளை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும் எனக்கோரி திருச்சியை சேர்ந்த ஜோசப் சகாயராஜ் என்பவர் சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2002ம் ஆண்டு பரனூர், ஆத்தூர் சுங்கசாவடிகளை, 564 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கிய தனியார் நிறுவனம், இதுவரை ஆயிரத்து 114 கோடி ரூபாய்  வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  

 இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நவம்பர் 8ம் தேதி விசாரணைக்கு வந்தது.  அப்போது, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மத்திய அரசின் உதவி சொலிசிட்டர்  ஜெனரல் கார்த்திகேயன், ஒப்பந்தக்காலம் முடிந்து விட்டால் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கூற முடியாது. மாறாக, விதிகளின்படி, 40 சதவீத சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். இந்த வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. குறிப்பாக, மதுரவாயல்-வாலாஜாபேட்டை சாலை மிக மோசமாக பராமரிக்கப்படுகிறது என்றனர். இந்த வழக்கில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் புகைப்படங்களுடன் அறிக்கை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த சாலையில் குண்டு, குழிகளை பேட்ஜ் வேலை மட்டுமே செய்துள்ளது அறிக்கையின் மூலம் தெரியவருகிறது. மதுரவாயல்-பாரிவாக்கம் சந்திப்பில் சாலையே சரியாக தெரியவில்லை.  சாலையில் விளக்குகள் ஒழுங்காக எரியவில்லை. சாலை வழிகாட்டியும் சரியாக அமைக்கப்படவில்லை. இதனால் பல விபத்துகள் ஏற்படுகின்றன.

தங்க நாற்கர திட்டம் 2004ல் முடிக்கப்பட்டது. அதிலிருந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. பராமரிப்பு சரியாக நடக்கவில்லை. இந்த சாலையில் கூடுதல் வாகன நெருக்கடி உள்ளது. தண்ணீர் லாரிகள், மணல் லாரிகள் ஏராளமாக செல்வதால் சாலை  பழுதாகின்றன. ஆனால், பழுதுகளை பேட்ஜ் வேலை செய்து சரிகட்டி வருகிறார்கள். சாலையை பராமரிப்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய நிபுணர்கள் முன்கூட்டியே யோசித்திருக்க வேண்டும். அதை செய்யவில்லை.  தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் மனோகரன் வாதிடும்போது, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநருக்கு 2019 ஜனவரி 4 மற்றும் மார்ச் 11ம் தேதி இந்த சாலை பராமரிப்பு, சாலை வழிகாட்டி, உயர்தர மின் விளக்குகள் பொருத்துதல் குறித்து கடிதங்கள் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  

எனவே, மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலையை ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனரை நியமிக்க வேண்டும் என்று  கூறியுள்ளார்.எனவே, இந்த சாலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய இந்த நீதிமன்றம் வக்கீல் கமிஷனரை நியமனம் செய்கிறது. அவர் சாலையை ஆய்வு செய்து ஜனவரி 29ம் தேதி புகைப்படங்கள் மற்றும் உரிய ஆவணங்களுடன்   அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவருக்கு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் தமிழக போலீசாரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



Tags : Maduraivayal - Walajapet National Highway Inspection Report Madurai ,The Walajapet National Highway Commission , Madurai: Walajapet National Highway Commission appointed
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை