×

26ம் தேதி காலை வானில் நிகழும் வளைய சூரிய கிரகணத்தை காண தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு: 9 மாவட்டங்களில் முழுமையாக தெரியும்

சென்னை: தமிழகத்தில் வரும் 26ம் தேதி வானில் நிகழும் வளைய சூரிய கிரகணத்தை தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் காணும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து, சென்னையில் நேற்று சென்னை கணித அறிவியல் மைய விஞ்ஞானி ராமானுஜம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் ராமலிங்கம், மாநில செயலாளர் ராமமூர்த்தி, மாநில பொருளாளர் ஜீவானந்தம் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் வரும் 26ம் தேதி காலை 9 மணிக்கு அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் நிகழ உள்ளது. சூரிய கிரகணத்தின் போது அனைவரும் வெளியே வரலாம். எப்போதும் போல் நடமாடலாம். இதனால் எந்த பிரச்னையும் ஏற்படாது. இதற்கு முன்னர் தமிழகத்தில் கடந்த 2010 ஜனவரி 15ம் தேதி ராமேஸ்வரத்தில் வளைய சூரிய கிரகணம் தோன்றியது.

சூரிய கிரகணம் என்பது வானத்தில் சந்திரனின் நிழல் விளையாட்டு மட்டும்தான். இந்த வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் ஊட்டி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் மற்றும் ஈரோடு என 9 மாவட்டங்களில் முழுமையாக தெரியும். மற்ற மாவட்டங்களிலும் மற்றும் இந்தியா முழுவதும் பகுதி சூரிய கிரகணமாகவே தெரியும்.

சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் பாதிப்பு ஏற்படும். எனவே, தமிழகத்தில் அனைவரும் வளைய சூரிய கிரகணத்தை எளிமையாக காண 2 லட்சம் பாதுகாப்பான சூரிய வடிகட்டி கண்ணாடிகள் மூலம் 20 லட்சம் பேர் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. இந்த கண்ணாடிக்கு 10 விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பெசன்ட் நகர் கடற்கரையில் தேநீர் விருந்துடன் காலை 8 மணி முதல் 11.30 மணி வரை வளைய சூரிய கிரகணத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

Tags : Tamilnadu Science Movement ,sky , Tamilnadu Science Movement organizing a solar eclipse on the 26th morning
× RELATED வானில் ஓர் உரையாடல்