×

சென்னை புறநகர், செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பருவமழை பெய்தும் ஏரிகள், குளங்கள், கிணறுகள் நிரம்பாத மர்மம்: பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனம் என குற்றச்சாட்டு

சென்னை புறநகர், செங்கை, காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிணறுகள், நீர்வரத்து கால்வாய்கள் உள்ளன. கடந்த மூன்று  ஆண்டுகளாக சென்னை புறநகர், செங்கை, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் போதிய அளவு பருவமழை பெய்யாததால்  ஏரி, குளம், குட்டைகள்  மற்றும் அணைக்கட்டுகளிலும் போதிய அளவு தண்ணீர் தேங்கவில்லை.  நிலத்தடி  நீர்மட்டம் கடுமையாக பாதித்தது. கிணறுகள் மற்றும்  ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததால், குடிநீர் மட்டுமின்றி, விவசாயத்திற்கும் பாசன நீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. கால்நடைகளுக்கும்  குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்படும்  நிலை ஏற்பட்டது.

சிறிய பரப்பளவில் கட்டப்படும் வீடுகளில், மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தும் அதிமுக அரசு, வயல் வெளிகளிலும், திறந்த பரப்புகளிலும் பெய்யும்  மழைநீர் வீணாகாமல் ஏரி மற்றும் குளங்களில் சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்த  மாவட்டங்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொது கிணறுகள் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதில், பல ஆயிரம் பொது கிணறுகள் மாயமாகிவிட்டன. கிணறு இருந்த சுவடே இல்லை. மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில்பெரும்பாலான ஏரிகளில் அரசு மண் குவாரி  விடப்பட்டது. இந்த ஏரிகளில் இருந்து, அளவுக்கதிகமாக மண் வெட்டி எடுத்து விற்கப்பட்டது.இந்த ஏரிகளில் நீர்பிடிப்பு  நிலப்பகுதிகளில் இருந்து,  மண்ணை வெட்டி எடுத்து, டிப்பர் லாரிகளில் லோடு, லோடாக கொண்டு செல்லப்பட்டது. அதனால், மண் வெட்டி எடுக்கப்பட்ட ஏரிகளில், நீர்பிடிப்பு  நிலப்பகுதிகள், மேடு பள்ளமாக அலங்கோலமானது.

பதினைந்து அடி ஆழத்திற்கு மேல் குழி தோண்டி, மண் வெட்டி எடுக்கப்பட்டதால், சமமாக இருந்த ஏரியின் நீர்பிடிப்பு நிலப்பகுதிகள், சிறு குட்டையாக கிடக்கின்றன. அதனால், மழைக்காலத்தில் ஏரிக்குள் வரும் மழைநீர், குட்டை குட்டையாக தேங்கி கிடக்கிறது.  மேலும், நிலத்தடி நீர் முற்றிலும்  குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் நடப்பாண்டு  பருவமழை பெய்தும், நீர் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாததால், அனைத்து ஏரிகளும் வறண்டு கிடக்கிறது. மேலும் போதிய பராமரிப்பு இல்லாமல் தண்ணீரானது வீணாகிறது. பொதுப்பணித்துறை மற்றும் ஒன்றிய  அலுவலகங்கள்  கண்காணிப்பில் 1,416 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாயில் முள்  செடிகள் மற்றும் பாலிதீன் கவர்கள் கொட்டி கிடப்பதால் மழை நீர் ஏரிக்கு வர வழியில்லாத நிலை உள்ளது. மாதம்தோறும் கலெக்டர் அலுவலகத்தில்   நடக்கும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நீர்வரத்து கால்வாய்களை சீர் செய்யுங்கள் என உரத்த குரலில் விவசாயிகளும் கோரிக்கை  விடுக்கின்றனர்.

அதற்கு அதிகாரிகளும் சரி செய்து விடுவோம், நிதி கிடைக்கவில்லை, வந்ததும் தூர் வாரப்படும் என சம்பிரதாயத்திற்காக பதில் கூறுவதையே  வழக்கமாக கொண்டுள்ளனர். விளைவு மழையின்போது அதன் நீரானது ஏரிகள் உள்ளிட்ட நீர்  நிலைகளுக்கு செல்வதில்லை. ஆங்காங்கு தேங்கி  வீணாகிறது.மழைக் காலங்களில் நீரை சேமிக்க தவறுவதால் நிலத்தடிநீர் குறைந்து கடும் வறட்சியை சந்திக்கும் நிலை  தொடர்கிறது. இந்த நிலத்தடிநீரை நம்பி, 5 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் உள்ளன. வருணபகவான் கருணை காட்டினாலும், அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயம் இல்லாமை, மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் உருவாகி  உள்ளன. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘நீர்வரத்து கால்வாய்களை தூர்வார பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில்  மனு கொடுத்து விட்டோம்.

ஆனால் பயனில்லை. தற்போது பெய்து வரும் மழை நீரானது  1000க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை நீரை கூட தேக்கி வைக்க முடியவில்லை. ஏரி மதகுகளில் உள்ள ஷட்டர்கள் சேதமடைந்து மாத  கணக்காகி விட்டன. இதை திறக்கவோ, அடைக்கவோ முடியாத நிலை இருப்பதால் சிறிதளவு தேங்கும் தண்ணீரும் வீணாகிறது. நல்ல மழை பெய்தும், ஏரிகள் நிரம்பாததற்கு அதிகாரிகள்  தான் காரணம். உலக வங்கியிடம் கடன் வாங்கி ஏரிக்கரைகளை மட்டும் சீரமைத்தனர்.  நீர்வரத்து கால்வாய்களை கண்டு கொள்ளவில்லை’’ என்றனர்.எனவே இனிவருங்காலங்களில் இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் மழை நீரை ஒரு துளி  விடாமல் எப்படி சேமிப்பது மற்றும் எந்தக்காலத்திலும்  தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க ஆறுகளை இணைப்பது, ஏரிகளுடன் நீர்வரத்து கால்வாய்களை இணைப்பது உள்ளிட்ட விஷயங்களில்  கவனமாக செயல்பட வேண்டிய  நடவடிக்கைகளை மாநில அரசு உடனே தொடங்க வேண்டியது அவசியம்.

நிலத்தடி நீர் குறைவால் ஏற்படக்கூடிய பிரச்னைகள்

நிலத்தடிநீர் குறைவால் விவசாயம் நலிவுறும். விவசாயம் நலிவுற்றால் உணவுப் பிரச்னை ஏற்படும். பல தொழில்கள் நிலத்தடி நீரைச் சார்ந்து இருக்கின்றன. இவை எல்லாம் நிலத்தடி நீர் இல்லாவிட்டால் நலிவுபெறும்.
கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் குடியிருக்கும் மக்கள் தங்கள் குடிநீர் தேவைக்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறார்கள். குடிநீர் என்றால் குடிப்பதற்கு மட்டும் என்று அர்த்தம் இல்லை. வீட்டிற்கு வேண்டிய அனைத்து  உபயோகங்களுக்குமான நீர் என்றுதான் அர்த்தம். நிலத்தடி நீர் குறைவால் குடியிருப்புகளையே காலிசெய்ய வேண்டிய நிலை உருவாகக்கூடும்.இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருக்கும் மற்ற சிறுசிறு தொழில்களும் நசிந்துபோகும். இச்சிறு  தொழில்கள் மற்ற பெரும் தொழில்களையும்  மக்கள் குடியிருப்புகளையும் சார்ந்திருப்பவையாக இருக்கும். சரியான விவசாயமும், தொழிலும் மக்கள் நடவடிக்கைகளும் இருந்தால்தான் ஒரு பகுதி சுத்தமாக இருக்கும். இல்லாவிடில் அந்தப்பகுதி  தரிசாகப்  போய் பாழடைந்து சுற்றுச்சூழல் மாசுபட ஏதுவாகும்.

ஏரிகளை ஆக்கிரமித்து விவசாயம்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளாக ஏரியில் ஆக்கிரமிப்புகள் பெருகி உள்ளன. ஏரிகளை ஆக்கிரமித்து பல ஏக்கர் பரப்பில் சிலர் விவசாயம் செய்து  வருகின்றனர். இவ்வாறு விவசாயம் செய்பவர்கள், ஏரி நிரம்பும் போது  பயிர்கள் மூழ்காமல் இருக்க ஏரியின் உள்பகுதியில் நீர் பிடிப்பை குறைத்துள்ளனர்.மேலும் மழைக்காலங்களில் ஏரியின் மதகுகள், ஏரி கரைகளை உடைத்து தண்ணீர் வெளியே செல்லும்படி செய்கின்றனர். இந்த ஏரி தண்ணீரை நம்பி பயிர் செய்து  வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதித்துள்ளனர். மழை காலங்களில் ஏரி நிரம்பினால் 6 மாதம் வரை தண்ணீர் இருந்து வந்த ஏரிகளில் தற்போது நிலைமை மாறி மூன்று மாதத்திற்கு உள்ளாகவே ஏரிகள் வறண்டு விடுகின்றன.

மத்திய நிலத்தடிநீர் வாரியம் எச்சரிக்கை

நீர்வள நிர்வாகம் சரியான முறையில் செயல்படுத்தப்படாவிட்டால், 2025ம் ஆண்டில் நீர்த்தேக்கங்களில் உள்ள  நிலத்தடி நீர் முற்றிலுமாக வறண்டு போகும் என்று மத்திய நிலத்தடி நீர் வாரியம் எச்சரித்துள்ளது. இப்படி வறண்டு போனால் எந்த  போர்வெல்  கிணற்றிலும் தண்ணீர் இருக்காது.நாட்டில் உள்ள நீர் ஆதாரங்கள், நமக்கு குடிநீருக்கு என்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் குடிநீர் திட்டங்கள் அனைத்தும் ஏரிகள் மூலம் கிடைக்கும் தண்ணீர்  மற்றும் நிலத்தடி நீரை மட்டுமே  நம்பியிருக்கின்றன. மின்சாரம் இல்லாவிட்டால் கூட வேறு வழிகளில் சமாளித்து விடலாம். ஆனால் இயற்கை தந்த கொடையான நீரை செயற்கையாக உருவாக்க முடியாது. மேலும் என்னதான் கடல் நீரை குடிநீராக மாற்றினாலும் அதன்  விளைவுகள் என்ன என்பதை  எதிர்காலத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

Tags : lakes ,Chennai ,Thiruvallur ,wells ,districts ,suburbs ,Kanchi ,Chengai ,Monsoon lakes , Monsoon lakes, ponds, wells in the Chennai suburbs, Chengai, Kanchi and Thiruvallur districts
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!