×

அரசு துறைகளில் அவுட் சோர்சிங் திட்டத்தில் முறைகேடு: கூலியை பங்கு போட்டு மோசடி

கோவை: தமிழகத்தில் அரசு துறைகளில் ‘அவுட் சோர்சிங்’ பணிக்காக முறையாக சம்பளம் வழங்காமல் மோசடி நடப்பது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணி, உள்ளாட்சி, ஊரக வளர்ச்சி உட்பட பல்வேறு முக்கிய அரசு துறைகளில் அதிகாரிகள், அலுவலர்கள் கண்காணிப்பு பணி மட்டுமே மேற்கொள்ளும் நிலை இருக்கிறது. அரசு மற்றும் அரசு சார்பு  துறைகளில் 50 முதல் 60 சதவீதம் காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்கள் தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் ‘அவுட் சோர்சிங்’ என்ற வெளி பணியாட்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதே போல்   இ-சேவை மையங்கள் முழு  அளவில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்கள் மூலமாக நடக்கிறது. தாசில்தார், வருவாய் அலுவலர்கள் இதில் முழுமையாக தலையிட முடியாத நிலையிருக்கிறது.

தேர்தல் பணிகள் பெரும்பாலானவை அவுட் சோர்சிங் முறையில் நடக்கிறது. மாநகராட்சிகளில் சொத்து, குடிநீர், தொழில் வரி வசூல், ஆட்டோ டி.சி.ஆர், தணிக்கை, பொதுப்பணிகளில் அவுட் சோர்சிங் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  நகராட்சி, பேரூராட்சிகளிலும் அவுட் சோர்சிங் நடைமுறை பல ஆண்டிற்கு முன்பே வந்து விட்டது. குறிப்பாக குப்பை சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.   வீடுகளில்  குப்பை சேகரிப்பு பணியில் ‘அவுட் சோர்சிங்’ பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆவின், வேளாண்மை, போக்குவரத்து, சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் அவுட் சோர்சிங் முறை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

ஆளில்லாத  குறையை தீர்க்க அவுட் சோர்சிங் அவசிய தேவையாக இருக்கிறது. வேலை எளிதாக முடிகிறது என பொதுமக்கள் நிம்மதியடைகிறார்கள்.  ஆனால் குறைந்த சம்பளத்தில் அரசு ஆவணங்களை சரிபார்க்கும் அவுட் சோர்சிங் பணியாளர்களால்  தவறு, முறைகேடு நடப்பது அதிகமாகிவிட்டது. அரசு அதிகாரிகள் ஆவணங்களை, பணிகளை மேற்பார்வை செய்தாலும் சில வகையான தவறுகள் வெளிப்படையாக நடப்பதாக கூறப்படுகிறது. அவுட் சோர்சிங்கில் போதுமான கல்வித்தகுதி  இல்லாத பணியாளர்கள் நியமிக்கப்படுவதாக தெரிகிறது. இவர்களால் பணிகளை சிறப்பாக செய்ய முடிவதில்லை. தவறு செய்யும் அவுட் சோர்சிங் பணியாளர்கள் மீது அரசு துறையினரால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையிருக்கிறது.

தவறு நடந்தால் அதற்கு அரசு அதிகாரிகள் மட்டுமே  பொறுப்பேற்க முடியும் நிலையுள்ளது. பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக தகுதியான ஆட்களை நியமிக்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு அலுவலகங்களில் பணியாளர்கள்  நியமனம் மந்த கதியில் நடக்கிறது. தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தினால் குறிப்பிட்ட சில பதவிகளுக்கு மட்டுமே தேர்வு நடக்கிறது. வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக அரசு அலுவலகங்களுக்கான ஆட்கள் தேர்விற்கு நேர்முக தேர்வு  நடப்பது அரிதாகி விட்டது. அரசு அலுவலங்களில் அவுட் சோர்சிங் பணியாளர்கள் நியமனம், சம்பளத்தில் பெரும் முறைகேடு நடக்கிறது.

குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இல்லாத நபர்கள் பெயர்களில் வேலை செய்ததாகவும், சம்பளம் வழங்கியதாகவும் கணக்கு காட்டுவது வழக்கமாக நடக்கிறது. ேகாவை உட்பட  பல்வேறு மாவட்டங்களில் இது தொடர்பாக புகார் எழுந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அளவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவுட் சோர்சிங் தொழிலாளர்கள் குறைந்தபட்ச கூலிக்கு பணியாற்றுகின்றனர். இவர்களில் சிலரை  அரசு துறையினர் விதிமுறை மீறல், லஞ்சம் பெற பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.   

இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கத்தினர் கூறுகையில், ‘‘அரசு துறைகளில் காலி பணியிடங்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகமாகி விட்டது. பணி பாதுகாப்பு இல்லாத நிலையிருக்கிறது. டெண்டர், திட்டம் அமலாக்கத்தில் முறைகேடு  செய்வதுடன் சிலர், ஆட்கள் நியமனத்திலும், கூலியிலும் முறைகேடு செய்கிறார்கள். அவுட் சோர்சிங் பணி தொடர்பாக மாநில அளவில் தணிக்கை நடத்தவேண்டும். முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.

Tags : Scandal in government sector outsourcing scheme: wage-sharing scam
× RELATED நெல்லை பாஜக வேட்பாளர் நயினார்...