×

நில ஆர்ஜிதம் செய்யாததால் காத்திருக்கும் 120 திட்டங்கள்: 4 ஆண்டாக 41 பணிகள் தடுமாற்றம்

கோவை: தமிழக நெடுஞ்சாலைத்துறையில் அறிவிக்கப்பட்ட 120 திட்டப்பணிகள், நில ஆர்ஜிதம் செய்யாமல் முடங்கி கிடக்கிறது.  தமிழகத்தில் 63,650 கி.மீ. தூரத்திற்கு ரோடு உள்ளது. தேசிய நெடுஞ்சாலை, நெடுஞ்சாலையம் ஆணையகம், மாநில நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட முக்கிய ரோடு, இதர மாவட்ட ரோடு, கிராம ரோடு, உள்ளாட்சி ரோடு என பல்வேறு பிரிவுகளாக  ரோடு பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு, புதுப்பித்தல், உருவாக்குதல் பணிகளில் நில ஆர்ஜித பணி முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர்கள் கட்டுப்பாட்டில் இந்த நில ஆர்ஜித பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால் வருவாய்த்துறையினர் பணி சுமையால் நில ஆர்ஜிதம் செய்ய முடியாத நிலையிருப்பதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சென்னை,  விழுப்புரம், திருச்சி, மதுரை, சேலம், திருப்பூர், கோவை, நெல்லை மாவட்டங்களில் ரோடு பணிகளுக்காக நிலம் எடுக்க சிறப்பு பிரிவு 2 ஆண்டிற்கு முன் துவக்கப்பட்டது.  இந்த பிரிவு துவங்கப்பட்டு, தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டும் பணிகள் முடங்கியே கிடக்கிறது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 120 திட்ட பணிகள், குறிப்பாக புதிய பைபாஸ் ரோடு, தரை பாலம், உயர்மட்ட பாலம்,  ரோடு விரிவாக்கம், புதிய பாதையில் ரோடு அமைத்தல் போன்றவை முடங்கிவிட்டது.
கன்னியாகுமரி, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 200 திட்டப்பணிகளுக்காக 2 ஆண்டில் 1,760 எக்டர் நிலம் இந்த சிறப்பு பிரிவால் கையகப்படுத்தப்பட்டது.

120 திட்டப்பணிகளுக்காக குறிப்பாக கோவை ரிங் ரோடு, கரூர், ஊட்டி பைபாஸ் ரோடு, பொள்ளாச்சி ரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ரோடு விரிவாக்க பணிகளுக்காக 7 ஆயிரம் எக்டர் நிலம் கையகப்படுத்தவேண்டியுள்ளது. கடந்த 5 ஆண்டாக,  மாவட்ட வருவாய் பிரிவும், சிறப்பு பிரிவுகளும் நில ஆர்ஜித பணிகளை இழுபறி நிலையில் ைவத்திருக்கிறது. கட்டுமானங்களை இடித்துவிட்டு நில ஆர்ஜிதம் செய்வதில் மட்டுமே கடந்த காலங்களில் பிரச்னை நிலவியது. தற்போது  பயன்பாட்டில்லாத நிலம், அரசு மற்றும் அரசு சார்பு துறைகளிடம் உள்ள நிலங்களை கூட சிறப்பு பிரிவினரால் கையகப்படுத்த முடியவில்லை.

வருவாய்த்துறை வசம் உள்ள நிலங்களை அதே துறை அதிகாரிகளால் கூட கையகப்படுத்த தாமதம் நிலவுகிறது. உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, மின் வாரியம் உட்பட பல்வேறு துறையினர் தங்களது வசம் உள்ள நிலங்களை  ரோடு பணிக்காக விட்டு தர காலம் கடத்தி வருகின்றனர். நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் நில ஆர்ஜித பைல்கள் குவிந்து வந்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 4 ஆண்டில் 41 திட்டப்பணிகளுக்காக நில ஆர்ஜிதம் தொடர்பாக அனுப்பிய பைல்கள் இறுதி செய்யப்படாமல் முடங்கி கிடக்கிறது. நில ஆர்ஜிதம், மறு வாழ்வு, மறு குடியமர்வு உரிமைகள் சட்டம் 2013ன் படி, நில ஆர்ஜிதம் செய்வதில்  சிக்கல் இருப்பதாக சிறப்பு பிரிவினர் புலம்புகின்றனர். வழக்கு விவகாரத்தாலும் சில ரோடு பணிகளின் அறிவிப்பு நிலையில் இருக்கிறது. நில ஆர்ஜித விவகாரத்தால் காங்கேயம்பாளையம் பைபாஸ் ரோடு உள்ளிட்ட சில திட்டப்பணிகள்  ரத்தாகிவிட்டது.

இது பற்றி விவசாயிகள், பொதுமக்கள் கூறுகையில், ‘‘ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்லை. பிரதான ரோடுகளில் பெரிய நிறுவனங்கள், கட்டிடங்களை கையகப்படுத்த நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை தயாராக இல்லை.  சில நிறுவனங்களுக்கு ஆதரவாக திட்ட மதிப்பீடு, வடிவமைப்பை மாற்றுகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் ரோடு, பாலம் கட்டும் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையில் உள்ளபடி ரோடு, பாலம்  அமைக்கப்படுவதில்லை. பல முறை திட்டம் மாற்றப்படுகிறது. நிலம் ஆர்ஜிதம் செய்யும்போது சந்தை மதிப்பை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மிரட்டல் போக்கில்தான் நில ஆர்ஜிதம் நடக்கிறது’’ என்றனர்.

டிசைன் மாற்ற லஞ்சம்

ரோடு, பாலம் கட்டும் பணிக்கு நில ஆர்ஜித சர்வே நடத்தும் நெடுஞ்சாலைத்துறையினர் கட்டிடம், நில உரிமையாளர்களிடம் பணம் கேட்டு பேரம் பேசுவது தொடர்கிறது. திட்ட வடிவமைப்பை மாற்ற பல லட்ச ரூபாய் பெறப்படுவதாக தெரிகிறது.  ரோடு, பாலம் கட்டினால் கிடைக்கும் கமிஷனைவிட, டிசைன் மாற்றுவதால், எளிதில் பெரும் தொகை கிடைப்பதால் முறைகேடு நீடிக்கிறது. விரிவான திட்ட அறிக்கையில் கூறியபடி ரோடு, பாலம் அமைக்காமல் டிசைன் மாற்றம் செய்தால் அது  தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படுவதில்லை. சந்தை மதிப்பீட்டில் நில ஆர்ஜிதம் செய்வதிலும் விதிமுறை மீறல் நடக்கிறது.


Tags : 120 projects waiting for land failure
× RELATED யானை தாக்கி விவசாயி பலி