×

தலைவர்களுடன் இருப்பது போல புகைப்படங்களை காட்டி வேலை வாங்கி தருவதாக மோசடி போலி ஐஏஎஸ் அதிகாரி கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி, தலைவர்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை காட்டி வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜனாதிபதி, கவர்னர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் இருப்பதை போன்ற புகைப்படங்களை உருவாக்கி, அவர்களின் பெயரை சொல்லி, வேலை வாங்கி தருவதாக சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, சரோஜா தேவி என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி மேற்பார்வையில், வேலைவாய்ப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், மோசடியில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்த சேஷையா, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த தியாகராஜ், சென்னையை சேர்ந்த டேனியல் ராஜ் (எ) விஜயகுமார் என்பது தெரிய வந்தது. இதில், மற்றவர்களை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த டேனியல் ராஜ் என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த டேனியல் ராஜை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர், தன்னை விஜயகுமார் ஐ.ஏ.எஸ். என்றும், தமிழக கவர்னரின் நேர்முக உதவியாளர் எனக் கூறி, சரோஜா தேவியிடம் ரூ.13 லட்சம் பெற்றுள்ளார். அதேபோல், தலைவர்களுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை காட்டி, ஒரு கோடி ரூபாய்க்கு மேல், மோசடி செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags : officer ,IAS ,IAS officer , Job, buy, fraud, fake IAS officer, arrested
× RELATED தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒன்றிய,...