×

தமிழகத்தை கலக்கிய கொள்ளைக்கும்பல் தலைவன் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு: நெல்லை அருகே பரபரப்பு

நெல்லை: தமிழகத்தைகலக்கிய கொள்ளை கும்பல் தலைவன் நீராவி முருகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகே நீராவிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நீராவிமுருகன்(33). இவர் மீது 3 கொலை மற்றும் பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த 2015ல் தூத்துக்குடி போலீசார், நீராவிமுருகனை கைது செய்தனர். 2 முறை குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். கொள்ளை கும்பல் தலைவனாகவும் செயல்பட்டு வந்தார்.  கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் 2 தொழிலதிபர்கள் வீடுகளில் பூட்டை உடைத்து 150 பவுன் நகை கொள்ளையடித்தனர்.  கைரேகைகள், நீராவிமுருகன் கும்பலுடன் ஒத்துப்போயின. இதையடுத்து போலீசார், தூத்துக்குடி மற்றும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கும்பலை தேடி வந்தனர்.

இந்நிலையில் நீராவி முருகன் தலைமையிலான கொள்ளை கும்பல், வள்ளியூர் சுந்தரவிநாயகர் கோயில் தெருவிலுள்ள ஒரு வீட்டில் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஈரோடு குற்றப்பிரிவு தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு வள்ளியூர் வந்தனர். அவர்களுடன் வள்ளியூர் போலீசாரும் இணைந்து இரவு 11 மணிக்கு நீராவி முருகன் பதுங்கி இருந்த வீட்ைட துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். இதையறிந்த கொள்ளை கும்பல் இரு கார்களில் தப்பியோடியது. போலீசார் அவர்களை விரட்டிச் சென்று கார் கண்ணாடியில் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து கொள்ளையர்களில் பவானி ஈஸ்வரன் (34) உள்ளிட்ட 3 பேர் காரை நிறுத்தி விட்டு இருளில் தப்பிச் சென்றனர். மற்றொரு காரில் இருந்த நீராவி முருகன், அவரது கூட்டாளியான தூத்துக்குடியை சேர்ந்த மரிய ரகுநாத் (34) ஆகியோரை மடக்கிப் பிடித்தனர்.

பவானி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் அவருடன் வந்த தனிப்படையினர், நீராவிமுருகனை துரத்தி பிடிக்க முயன்றபோது அவர் காரை ஏற்றி இன்ஸ்பெக்டர் தேவேந்திரனை கொல்ல முயற்சித்தார். சுதாரித்து கொண்ட இன்ஸ்பெக்டர், அவர்களின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி மடக்கினார். அவர்களிடமிருந்து 50 பவுன் நகை, இரு  கார்கள், ஒரு கைத்துப்பாக்கி, அரிவாள், கத்தி ஆகியவை பறிமுதல்  செய்யப்பட்டன. பின்னர் இருவரையும் ஈரோட்டுக்கு அழைத்துச் சென்றனர்.  நீராவிமுருகனுக்கு அடைக்கலம் கொடுத்த பெண் மற்றும் வீட்டின் உரிமையாளரிடம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : gang leader ,Tamil Nadu ,Tirunelveli , Tamil Nadu, Loot, Paddy
× RELATED நயினார் நாகேந்திரனின்...