×

தொலைக்காட்சி நிறுவன ஊழியரின் வீட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

சென்னை: போரூர் அடுத்த கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த அமரன்நாதன் (30), சென்னையில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததால்  பெற்றோர் வீட்டில் உள்ளார். நேற்று முன்தினம் இரவு மனைவியை பார்க்க அமரன்நாதன் மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து நேற்று காலை வீட்டுக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 30 சவரன் தங்க  நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. „ ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் தெருவை சேர்ந்த கவுரி (76) என்பவரின் வீட்டில் இருந்து, தங்க செயினை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். „ தண்டையார்பேட்டை சேணியம்மன் கோயில் தெருவை சேர்ந்த நாகப்பன் (60), நேற்று கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே பைக்கில் சென்றபோது, லாரி மோதி இறந்தார்.

„ தண்டையார்பேட்டை கணக்கர் தெருவை சேர்ந்த கோகுல் (18), சட்டக்கல்லூரி மாணவன். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு தனது நண்பர் யோகபிரகாஷ் என்பவருடன் பைக்கில், திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் அருகே சென்றபோது,  பின்னால் வந்த லாரி மோதியது. இதில், கோகுல் உயிரிழந்தார். படுகாயமடைந்த யோகபிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். „ கொடுங்கையூர் காந்திநகர் 1வது தெருவை சேர்ந்த நிர்மலா (75) என்பவர் கடைக்கு சென்றபோது, போலீசார் போல் நடித்த 2 பேர், நிர்மலா அணிந்திருந்த 5 பவுன் செயின் மற்றும் 2 பவுன் தங்க வளையல்களை பறித்துக்கொண்டு தப்பினர். „ தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரியும் ரத்தினகுமார் (58) என்பவரை, முன்விரோத தகராறில் உருட்டுக் கட்டையால் சரமாரிய தாக்கிவிட்டு தப்பிய சரவணன் என்பவரையும், அவரது நண்பர் ஜெயராஜையும்  போலீசார் தேடி வருகின்றனர்.

„ வியாசர்பாடி உதயசூரியன் நகரில் கஞ்சா விற்ற  சரசு (எ) ஆயிஷா (40) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 25 பொட்டலம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். „ பட்டாபிராம் தண்டுரை கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த சன்மதி (25), நேற்று முன்தினம் இரவு பட்டாபிராம் காவல் நிலையம் எதிரே சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், சன்மதி செல்போனை பறித்துக்கொண்டு  தப்பினர். „ அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் ராஜாஜி தெருவை சேர்ந்த அரவிந்த் (21), ப்ரீத்தி என்பவரை காதலித்து வந்தார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால், கடந்த 4ம் தேதி பிரீத்தி தற்கொலை செய்து கொண்டார். இதில், மனமுடைந்த அரவிந்த்  கடந்த 9ம் தேதி விஷம் குடித்தார். அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

போலி வக்கீல் கைது
கொத்தவால்சாவடி பகுதியில் பீடா கடை நடத்தி வருபவர் கோல்டன் தூரி (35). இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் வக்கீல் என்று கூறி அடிக்கடி மிரட்டி மாமூல் வாங்கி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கோல்டன் தூரி  இதுபற்றி கொத்தவால்சாவடி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த தனசேகர் (30) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தன்னை அந்தப் பகுதியில்  வக்கீல் என்று கூறி மாமூல் வசூலித்து  வந்தார் என்பதும் தெரியவந்தது.  இதையடுத்து அவரை  கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : shaving robbery ,TV company employee ,house ,robbery TV company employee , Television company employee, house, robbery
× RELATED இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?