×

குடியிருப்புகளில் கழிவுநீர் தேக்கம் பொதுமக்கள் சாலை மறியல்

திருவொற்றியூர்:  திருவொற்றியூர் அருகே குடியிருப்புகளில் புகுந்த கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவொற்றியூர்  ராஜிவ் நகரில்  200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ளப்படுவதால், அவ்வழியே செல்லும் பாதாள சாக்கடை குழாய்களில் உடைப்பு  ஏற்பட்டுள்ளது.  இதனால், கழிவுநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மெட்ரோ ரயில் பணி முடியும் வரை கழிவுநீரை லாரிகள் மூலம் அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதன்படி கழிவுநீரை அதிகாரிகள் அகற்றி வந்தனர். கடந்த சில நாட்களாக லாரி மூலம் கழிவுநீரை திருவொற்றியூர் மண்டல குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் அகற்றவில்லை. இதனால் ராஜிவ் நகரில் உள்ள வீடுகளில்  கழிவுநீர் புகுந்தது.

எனவே, கழிவுநீரை அகற்றும்படி இப்பகுதி மக்கள்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று கழிவுநீரை  அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காத குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளை  கண்டித்து திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மாநகராட்சி  அதிகாரிகள், லாரிகள் மூலம் கழிவுநீரை அகற்றுவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : areas ,road , Sewer, public, road pickup
× RELATED தஞ்சாவூர் மேம்பாலத்தில் அடுத்தடுத்து...