×

அரசியல் சாசனத்துடன் ஒத்து போகும் குடியுரிமை திருத்த சட்டம் சரிதான் 1,100 கல்வியாளர்கள் கூட்டறிக்கை

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக உள்நாட்டு, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் 1,100 பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாட்டு, உள்நாட்டு பல்கலைக் கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த  கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் 1,100 பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  அதில், ஐஐஎம் ஷில்லாங் தலைவர் ஷிசிர் பஜோரியா, நாலந்தா பல்கலை துணைவேந்தர் சுனைனா சிங், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் எஸ்எல்எல் மற்றும் சி.எஸ் டீன் ஐனுல் ஹாசன், அமைதி மற்றும் முரண்பாடு படிப்புகள்  மையத்தைச் சேர்ந்த அபிஜித், பத்திரிக்கையாளர் கஞ்சன் குப்தா, மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாபன் தாஸ் குப்தா உட்பட பலர் கையெழுத்திட்டு உள்ளனர். இந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அனைத்து தரப்பு மக்களும் அமைதியை கடைபிடிக்க வேண்டும். மதவாத பிரசார வலையில் விழுவதை தவிர்க்க வேண்டும். வேண்டும் என்றே குழப்பத்தை ஏற்படுத்தி, நாட்டில் அச்சுறுத்தலான சூழல் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் பல  இடங்களில் வன்முறை பரவுவது கடும் வேதனை அளிக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தல்களை சந்திக்கும் சிறுபான்மையினருக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை குடியுரிமை திருத்த சட்டம்  நிறைவேற்றியுள்ளது. 1950ம் ஆண்டு லியாகத்-நேரு ஒப்பந்தம் தோல்வி அடைந்ததில் இருந்தே, இந்த கோரிக்கையை பல தலைவர்கள் கட்சி பாகுபாடின்றி விடுத்துள்ளனர். இந்த விஷயத்தில் வடகிழக்கு மாநில மக்கள் தெரிவிக்கும் கவலைகள் சரியான விதத்தில் தீர்க்கப்பட வேண்டும்.

மதச்சார்பற்ற இந்திய அரசியல் சாசனத்துடன், குடியுரிமை திருத்த மசோதா சரியாக ஒத்துப்போவதாக நாங்கள் நம்புகிறோம். இது குடியுரிமை கோரும் எந்த நாட்டினரையும், எந்த மதத்தினரையும், எந்த நபரையும் தடுக்கவில்லை. குடியுரிமைக்கான விதிகளையும் இது எந்த விதத்திலும் மாற்றவில்லை. மேலே கூறப்பட்ட 3 நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தலை சந்திக்கும் சிறுபான்மையினரின் பிரச்னைகளை சிறப்பான சூழலின் கீழ் தீர்க்க மட்டுமே, இந்த திருத்த  சட்டம் வழிவகை செய்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : academics , Political Charter, Citizenship Amendment Act, Educators
× RELATED புதுபுது புத்தகங்களை வாங்கி வைத்து...