×

என்கவுன்டரில் கொல்லப்பட்ட 4 பேர் சடலங்களுக்கு மறுபிரேத பரிசோதனை: உறவினர்களிடம் ஒப்படைக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு

திருமலை: தெலங்கானாவில் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட டிஷா கொலைக் குற்றவாளிகள் 4 பேரின் சடலத்தையும் மறுபிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தெலங்கானா மாநிலம், சம்ஷாபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் டிஷா. இவரை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக எரித்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர், போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இந்த என்கவுன்டர் குறித்து விசாரணை நடத்த, உச்ச நீதிமன்றம் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை நியமித்துள்ளது. இந்த குழு, 4 பேரின் சடலங்களை மறுபிரேத பரிசோதனை செய்வதற்கான வாய்ப்பு உள்ளதால், நீதிமன்றம் உத்தரவிடும் வரை அவற்றை பதப்படுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி, ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் 4 பேரின்  சடலங்களும் வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சரவண், நேற்று நீதிமன்றத்தில்  மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘டிஷா கொலை வழக்கு குற்றவாளிகளின் 4 பேரின் சடலம் கடந்த 9ம் தேதி எங்கள் மருத்துவமனைக்கு  கொண்டு வரப்பட்டது.
அப்போது முதல் 2 முதல் 4 டிகிரி செல்சியசில்  4 உடல்கள் பதப்படுத்தப்பட்டு  வருகிறது. இருப்பினும், உடல்கள் 50 சதவீதம் அழுகி உள்ளன. இன்னும் 5, 6 நாட்கள் சென்றால்  100 சதவீதம் அழுகி விடும்,’ என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து, ‘தெலங்கானா மாநிலம் அல்லாத  வேறு மாநில மருத்துவர்களை அழைத்து வந்து நாளை (திங்கள்) மாலை 5 மணிக்குள் சடலங்களை மறுபிரேத பரிசோதனை செய்து, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்ய  வேண்டும், பின்னர் சடலங்களை அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்,’ என உத்தரவிட்டது.


Tags : High Court ,encounter ,relatives ,re-examination , Encounter, 4 people corpses, rehabilitation, High Court
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...