×

கட்டாக்கில் இன்று கடைசி போட்டி தொடரை வெல்ல இந்தியா முனைப்பு

கட்டாக்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, கட்டாக் பாரபட்டி ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதி வருகின்றன.  சேப்பாக்கத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது. அடுத்து விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது போட்டியில், கடும் நெருக்கடியுடன் களமிறங்கிய இந்திய அணி 107 ரன் வித்தியாசத்தில் அமர்க்களமாக வென்று 1-1 என சமநிலை ஏற்படுத்தியதுடன் தொடரை வெல்லும் வாய்ப்பையும் தக்கவைத்துக்  கொண்டது. தொடக்க வீரர்கள் ரோகித் ஷர்மா 159 ரன், கே.எல்.ராகுல் 102 ரன் விளாசிய நிலையில், கடைசி கட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பன்ட் அதிரடியாக ரன் குவித்து வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தவிடுபொடியாக்கினர்.

அடுத்து 50 ஓவரில் 388 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் 43.3 ஓவரில் 280 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. லூயிஸ் 30, ஹோப் 78, பூரன் 75, கீமோ பால் 46, கேரி பியரி 21 ரன் எடுத்தனர். இந்திய  பந்துவீச்சில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தி அசத்தினார். ஷமி 3, ஜடேஜா 2, தாகூர் 1 விக்கெட் வீழ்த்தினர். ரோகித் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் இன்று நடக்கிறது. இதில் வென்று தொடரை கைப்பற்ற இரு அணிகளுமே வரிந்துகட்டுகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் சொந்த மண்ணில்  தொடர்ச்சியாக 2 இருதரப்பு ஒருநாள் போட்டியில் தோற்றதில்லை என்ற சாதனையை தக்கவைத்துக் கொள்ள இந்தியா முனைப்புடன் உள்ளது. மேலும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடர்ந்து 10வது இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரை  கைப்பற்றவும் கோஹ்லி & கோ காத்திருக்கிறது.

இந்திய அணியில் காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார். இரு அணிகளிலுமே அதிரடி வீரர்கள் அதிகம் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.  வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த 13 ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), மயாங்க் அகர்வால், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, யஜ்வேந்திர  சாஹல், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, முகமது ஷமி, ஷர்துல் தாகூர்.

வெஸ்ட் இண்டீஸ்: கெய்ரன் போலார்டு (கேப்டன்), சுனில் அம்ப்ரிஸ், ஷாய் ஹோப், கேரி பியரி, ரோஸ்டன் சேஸ், அல்ஜாரி ஜோசப், ஷெல்டன் காட்ரெல், பிராண்டன் கிங், நிகோலஸ் பூரன், ஷிம்ரோன் ஹெட்மயர், எவின் லூயிஸ்,  ரொமாரியோ ஷெப்பர்டு, ஜேசன் ஹோல்டர், கீமோ பால், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.

Tags : match ,Cuttack ,India , India, West Indies, last ODI
× RELATED மைதான் இந்தி விமர்சனம்