×

2022ம் நிதியாண்டில் சுற்றுலா மூலம் 3.5 லட்சம் கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம்

புதுடெல்லி:  இந்தியாவின் சுற்றுலா தொழில் மூலம் 2022ம் நிதியாண்டில் 50 பில்லியன் டாலர் (ரூ.3.5 லட்சம் கோடி) வருவாய் ஈட்டுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ)  அமிதாப் காந்த் தெரிவித்தார். புதுடெல்லியில் 15வது சிஐஐ ஆண்டு சுற்றுலா மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், அமிதாப் காந்த் பேசினார். அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா தொழில் பிரதான இடத்தை வகிக்கிறது.  சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தால், இந்த துறையில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். நேரடி, மறைமுகமாக வேலைவாய்ப்பை உருவாக்குவதால் இந்த தொழிலை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

இந்தியாவின் சுற்றுலா தொழில் மூலம் கடந்த 2018ம் ஆண்டில் மொத்தம் 28.6 பில்லியன் டாலர் (ரூ.2 லட்சம் கோடி) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 2022ம் ஆண்டில் வருவாய் 50  பில்லியன் டாலராக (ரூ.3.5 லட்சம் கோடி) அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை மூலம் வருவாய் என்பது குறைவுதான். உலகளவில் இந்த தொழிலில் ஈட்டப்படும் வருவாயில் இந்தியாவின் பங்கு என்பது 1.97 சதவீதம் தான். இது மிகவும் குறைவு. இதை அதிகரிக்க வேண்டியது  மிகவும் அவசியம். அதனால்தான் 2022ம் ஆண்டில் சுற்றுலா தொழில் மூலம் 50 பில்லியன் டாலர் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சுற்றுலா தொழில் மூலம் வருவாய் அதிகரித்துள்ளது. நாட்டின் வருவாயில் இதன் பங்கு  9.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு
சுற்றுலா துறைக்கு அரசு ஆதரவு கரம் நீட்டியுள்ளது. சுற்றுலா பயணிகள் தங்கும் ஓட்டல்களின் அறை வாடகைக்கான ஜிஎஸ்டி வரியை கணிசமாக குறைத்துள்ளது.
* ஓட்டல்களில் ஓர் இரவு தங்குவதற்கு 7,500 வரை கட்டணம் வசூலிப்பதற்கு ஜிஎஸ்டி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 18% வரி விதிக்கப்பட்டது.
* இதேபோல், அறை வாடகை கட்டணம் 7,500க்கு மேல் இருந்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதற்கு முன்பு 28 சதவீதம் வசூலிக்கப்பட்டது.
* ஓட்டல்களில் அறை வாடகை கட்டண்ம் 1,000க்கு குறைவாக இருந்தால் அதற்கு ஜிஸ்டி வரி இல்லை.



Tags : India, Tourism Industry, Fiscal Year
× RELATED அட்சய திருதியையான இன்று காலையிலேயே 2...