×

எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது ஒரு கிலோ எடைகொண்ட ஒரு வெங்காயம் ₹140க்கு விற்பனை

*பொதுமக்கள் அதிர்ச்சி

திருப்பத்தூர் :   மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெங்காய சாகுபடி பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. இதனால், வரத்து குறைந்ததால் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ நாட்டு வெங்காயம் ₹200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் மத்திய அரசு துருக்கி, எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து வருகிறது. அதன்படி கடந்த வாரம் 200 டன் துருக்கி வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

மேலும், அந்த வெங்காயம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை அளிக்காத காரணத்தினால் தற்போது எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. கப்பல் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது.  அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் அந்த வெங்காயம் வந்துள்ளது. எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த வெங்காயம் இந்தியாவில் விளையும் வெங்காயத்தை போல் இல்லாமல், காரம் குறைவாகவும், உறிக்கும் போது கண் எரிச்சலை ஏற்படுத்தாத வகையில் இருக்கிறது. ஒவ்வொரு வெங்காயமும் 1 கிலோ அளவில் பெரியதாக உள்ளது.

முதல் கட்டமாக 3 டன் வெங்காயம் நேற்று திருப்பத்தூர் மொத்த மார்க்கெட் பகுதிக்கு வந்தது. இந்த வெங்காயம் ஒரு கிலோ ₹140 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு வெங்காயம் ₹140 கொடுத்து வாங்க வேண்டுமா? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இதுகுறித்து திருப்பத்தூர் மார்க்கெட் வெங்காய வியாபாரி கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டத்துக்கு பெரிய வெங்காயம் பெங்களூருவில் இருந்து வருகிறது. சாம்பார் வெங்காயம் உளுந்தூர்பேட்டை, திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து வருகிறது. வாரத்துக்கு 30 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.

எகிப்து வெங்காய வரவால் உள்ளூர் வெங்காயத்தின் விலை குறையும் என்று கூற முடியாது ஏன் என்றால் எகிப்து வெங்காயத்தின் தரம் சற்று குறைவாக உள்ளது. சுவை இருக்காது, எண்ணெய் அதிகமாக செலவாகும். 10 நாட்களுக்கு மேல் அந்த வெங்காயத்தை இருப்பு வைக்க முடியாது. காரமும் குறைவாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் அதை வாங்க விரும்பவில்லை என்றார்.

Tags : Egypt , thirupathur,onion,Eygpt onion
× RELATED கந்தகக்கல்: நீதிபதிகளின் ஆகாய வர்ண ரத்தினம்