×

சபரிமலைக்காக போக்குவரத்து மாற்றம் பக்தர்களின் வாகனங்களுக்கு : இனி கம்பம்மெட்டு தான் வழி

கம்பம் : போக்குவரத்து நெரிசலை கட்டப்படுத்த, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மட்டும் நேற்று முதல் கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக செல்லுமாறு காவல்துறையினர் போக்குவரத்தை மாற்றி அமைத்துள்ளனர். கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சர்வதேசப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று திரும்புகின்றனர்.

இதில் தென் மாநில, மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் நேரத்தையும், தூரத்தையும் குறைக்க தேனி, கம்பம், குமுளி வழியாக கோவிலுக்குச் செல்கின்றனர்.கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் செல்லும் நேரங்களில் இவர்களது வாகனங்கள் லோயர், குமுளி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பலமணி நேரங்கள் காலதாமதம் ஏற்பட்டது. அதனால் இதை தவிர்க்கும் விதமாக, கடந்த சில ஆண்டுகளாக கூட்ட நேரங்களில் பக்தர்களின் வாகனங்களை போலீசார் கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அனுமதித்தனர்.

இந்த ஆண்டு சபரிமலை மண்டலபூஜை தொடங்கி உள்ள நிலையில் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்களின் வாகனங்கள் செல்லத்தொடங்கி உள்ளது. அதனால் மாற்றுப்பாதையை அமல்படுத்த காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து தேனி எஸ்பி சாய்சரண் உத்தரவின்பேரில் நேற்று உத்தமபாளையம் டிஎஸ்பி சின்னக்கண்ணு தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி மற்றும் போலீசார், பிற மாவட்டங்களிலிருந்து தேனிவழியாக கோயிலுக்குச் செல்லும் வாகனங்களை கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக கட்டப்பனை, ஏலப்பாறை, குட்டிக்கானம், முண்டக்கயம், எரிமேலி வழியாக செல்லுமாறு போக்குவரத்தை மாற்றி அமைத்துள்ளனர்.

இதுகுறித்து டிஎஸ்பி சின்னக்கண்ணு கூறுகையில், `` போக்குவரத்து மாற்றுபாதையில் செல்வதை கண்காணிக்கவும், பக்தர்களின் பாதுகாப்பிற்கும் கம்பம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி மேற்பார்வையில் உத்தமபாளையம் காவல்துறை துணை கோட்டத்திலிருந்து சுமார் 100 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் புதிதாக கோயிலுக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தேனி மாவட்ட காவல்துறை சார்பாக ரூட்மேப் வழங்கப்படுகிறது’’ என்றனர்.

Tags : pilgrims ,Pampa , Lord iyyappan, Sabarimala,iyyappan Devotees,Traffic diversion
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்