குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் முழு அடைப்பு போராட்டம்

பாட்னா: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் அழைப்பு விடுத்திருந்தது. இதனையேற்று காலை முதலே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்து 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆங்காங்கே வாகனங்களுக்கு தீ வைப்பு, பொது சொத்துக்களுக்கு சேதம் என வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.

கடந்த 13ம் தேதி தொடங்கி நடந்து வரும் போராட்டங்கள் காரணமாக பல்வேறு இடங்களிலும் பதற்றம் நிலவி வருகின்றது. உத்தரப் பிரதேசம், கர்நாடகாவில் நேற்று முன்தினம் நடந்த கலவரத்தில், 3 பேர்  போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியாயினர். இந்நிலையில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 13 மாவட்டங்களில் நேற்று மதியம் மசூதிகளில் தொழுகையை முடித்தபின், முஸ்லிம்கள் தடையை மீறி போராட்டம் நடத்தினர்.

அவர்கள் போலீசார் மீது  கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். உத்தரப் பிரதேசத்தில் நேற்று நடந்த கலவரத்தில் 11 பேர் பலியாயினர். டெல்லியில் நேற்று பல இடங்களில் போராட்டம் நடந்தது. மக்கள் தேசியக் கொடியுடனும், ‘அரசியல் சாசனத்தை காப்பாற்றுங்கள்’ என்ற பேனருடனும் பேரணி சென்றனர். இந்நிலையில் நேற்று குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து பீகார் மாநிலத்தில் நாளை முழு அடைப்பு பேராட்டம் நடத்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் அழைப்பு விடுத்தது. குடியுரிமை சட்டதிருத்தம் அரசியலமைப்பு எதிரானது என்று தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியிருந்தார்.

Related Stories:

>