×

வங்கி ஏடிஎம்களில் நிரப்ப வந்த போது 52 லட்சத்துடன் எஸ்கேப் ஆன டிரைவர் மன்னார்குடி அருகே கைது

மன்னார்குடி: சென்னையில் ஏ.டி.எம்.ல் பணம் நிரப்ப வந்தபோது ரூ.52 லட்சம் பணத்துடன் மாயமான ஓட்டுனர் அம்புரோஸ் மன்னார்குடி அருகே கைது செய்யப்பட்டார். மன்னார்குடி அருகே பதுங்கி இருந்தவரை அதிகாலை கைது செய்த போலீஸ் ஓட்டுனர் அம்புரோஸை சென்னை அழைத்து வருகிறது. சென்னை நகரில் இயங்கும் பல்வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியை தி.நகரில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவன ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த நிறுவனத்தை சேர்ந்த மேற்பார்வையாளர் அசோக்நகர் வினோத் (28) தலைமையில் பணம் நிரப்பும் ஊழியர் கே.கே.நகர் வினோத் (26) மற்றும் பீகாரை சேர்ந்த துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு ஊழியர் முகமது (27) ஆகிய 3 பேரும் ஒரு வேனில் வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த வேனை வியாசர்பாடியை சேர்ந்த டிரைவர் அம்புரோஸ் (40) என்பவர் ஒட்டி வந்தார். இக்குழுவினர் தேனாம்பேட்டையில் 5 வங்கி ஏடிஎம்களில் பணத்தை நிரப்பிவிட்டு 87 லட்சத்துடன் வேளச்சேரிக்கு வந்தனர். பின்னர் வேளச்சேரி, விஜயநகர் முதல் பிரதான சாலையில் உள்ள விஜயா வங்கி ஏடிஎம்மில் நிரப்ப தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு மேற்பார்வையானர் வினோத், ஊழியர் வினோத் மற்றும் பாதுகாப்புக்கு துப்பாக்கியுடன் முகமது ஆகியோர் மையத்துக்குள் சென்றனர். வேனுக்குள் மீதமுள்ள 52 லட்சத்துடன் டிரைவர் அம்புரோஸ் நின்றிருந்தார். அப்போது வேனுக்கு எதிரே ஒரு லாரி வந்துள்ளது.

இதனால் வேனை தள்ளி நிறுத்துவதாக அம்புரோஸ் பணம் நிரப்ப சென்ற ஊழியர்களிடம் கூறினார். பின்னர் அவர்கள் ஏடிஎம்மில் பணத்தை நிரப்பிவிட்டு திரும்பியபோது 52 லட்சம் பணத்துடன் டிரைவர் அம்புரோஸ் மாயமானது தெரிந்தது. புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாசர்பாடியில் உள்ள டிரைவர் அம்புரோஸ் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது ரூ.20 லட்சம் பதுக்கி வைத்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மீதம் உள்ள பணத்துடன் அம்புரோஸ் மாயமாகி உள்ளதால் அவரது மனைவி ராணிமேரியை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மன்னார்குடி அருகே பதுங்கியிருந்த அம்புரோஸை கைது செய்து போலீசார் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.


Tags : bank ,Mannargudi ,ATM ,Chennai ,Ambrose , Chennai, ATM, Rs 52 lakh, driver, Ambrose, arrested
× RELATED ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி:...