மீண்டும் சாதிப்பேன்... மரியா ஷரபோவா

ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவா, 2019 சீசனில் காயம் காரணமாக அதிக போட்டிகளில் விளையாட முடியாமல் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் தற்போது 131வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முழு உடல்தகுதியுடன் மீண்டும் களமிறங்கத் தயாராகி உள்ள ஷரபோவா, அபுதாபியில் நேற்று முன்தினம் அஜ்லா டாம்ஜானோவிச்சுடன் மோதிய காட்சிப் போட்டியில் வெற்றியை வசப்படுத்தினார். 2020 சீசன் குறித்து அவர் கூறுகையில், ‘டென்னிசில் மீண்டும் சாதிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். 2019ல் காயம் காரணமாக அதிக போட்டிகளில் விளையாட முடியாதது துரதிர்ஷ்டவசமானது. எதிர்வரும் சீசனை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தான் எனக்கு நல்ல முன்னுதாரணமாகவும் ஊக்கசக்தியாகவும் விளங்குகிறார். அவரைப் பின்பற்றி உடல்தகுதியை மேம்படுத்திக் கொள்வதுடன் சரியான போட்டிகளை தேர்வு செய்து வெற்றிகளை குவிப்பேன்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories: