×

பெரும்பான்மை சிங்கள மக்களின் சம்மதமின்றி தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க முடியாது : இலங்கை அதிபர் கோத்தபய அறிவிப்பு

கொழும்பு: ‘பெரும்பான்மை மக்களின் சம்மதமின்றி, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க முடியாது,’’ என்று இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே அறிவித்துள்ளார்.  இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் 37 ஆண்டுகளாக நடந்த போர், கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. இதில், புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டார். 4 மாதங்களாக நடந்த இறுதிக்கட்ட போரில், 40 ஆயிரம் தமிழர்களை, இலங்கை ராணுவம் கொன்றதாக குற்றம்சாட்டப்ட்டது. இந்த போர் குற்றத்துக்கு, ஐநா மனித உரிமை ஆணைய தீர்மானங்கள் கடந்த 2013ம் ஆண்டில் இருந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. முன்னாள் அதிபர் சிறிசேனா அரசின் ஆதரவுடன், கடந்த 2015ம் ஆண்டு ஐ.நா மனித உரிமை ஆணையம் ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதில், ‘சர்வதேச விசாரணை அமைப்பை ஏற்படுத்தி இலங்கை ராணுவம் மற்றும் புலிகள் அமைப்பினர் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் குறித்து இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்–்கு அளித்த பதிலில் அவர் கூறியதாவது:
போர் குற்றம் பற்றி சிறிசேனா அரசின் ஆதரவுடன், 2015ம் ஆண்டு ஐ.நா மனித உரிமை கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தை தற்போதைய வடிவில் நான் பரிசீலிக்க முடியாது. சொந்த நாட்டுக்கு எதிராக, எனது அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. அதேபோல், பெரும்பான்மை மக்களின் (சிங்களர்கள்) சம்மதம் இல்லாமல்,  தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கப்படவும் வாய்ப்பில்லை. சீனாவுக்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு விடப்பட்ட ஹம்பந்தோட்டா துறைமுகம், வர்த்தக அடிப்படையிலானது. அந்த ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப் படாது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராயப்பட வேண்டியது முக்கியம். இந்த கவலையை சீனாவும் புரிந்து கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Tamils ,Gotabhaya: Gotabhaya ,majority Sinhalese ,Sri Lankan ,Sinhala ,Most , Tamils , devolved without the consent , majority Sinhala people,Gotabhaya
× RELATED தமிழ்நாட்டை ஏமாற்றிய மோடி, இப்போது...